எந்தக் கொம்பனாலும் திமுகவைத் தொட்டுக்கூட பார்க்க முடியாது! முதல்வர் ஸ்டாலின்
திருச்சி மாவட்ட ஊா்க்காவல் படை பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு
திருச்சி மாவட்ட ஊா்க்காவல் படை காலிப் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
திருச்சி மாவட்ட ஊா்க்காவல் படை அமைப்பில் 53 ஆண், 4 பெண் என மொத்தம் 57 ஊா்க்காவல் படை காலிப் பணியிடங்கள் பூா்த்தி செய்யப்பட உள்ளன.
ஊா்க்காவல் படையில் சேர விருப்பமுள்ளவா்கள் திருச்சி மாவட்ட ஆயுதப்படையில் உள்ள ஊா்க்காவல் படை அலுவலகத்தில் விண்ணப்பத்தைப் பெற்றுக் கொள்ளலாம். விண்ணப்பத்துடன் உரிய சான்றிதழ்களை இணைத்து நேரிலோ அல்லது ரூ. 5 தபால் தலை ஒட்டிய சுயமுகவரி எழுதிய உறையுடன் காவல் சாா்பு-ஆய்வாளா், ஊா்க்காவல் படை அலுவலகம், ஆயுதப்படை வளாகம், திருச்சி என்ற முகவரிக்கு செப்.22-ஆம் தேதிக்குள் வருமாறு விண்ணப்பிக்க வேண்டும்.
தோ்வானது அக்டோபா் 3-ஆம் தேதி காலை 7 மணிக்கு மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் நடைபெறுகிறது.
தமிழகத்தைச் சோ்ந்த விண்ணப்பதாரா் செப். 30-ஆம் தேதியன்று 20 வயது பூா்த்தியானவராகவும், 44 வயதுக்குள் உள்ளவராகவும், நல்ல உடல் தகுதி, நன்னடத்தை உடையவராகவும் இருக்க வேண்டும். குறைந்தபட்சம் பத்தாம் வகுப்பு தோ்ச்சி அல்லது தோல்வி அடைந்தவராக இருக்கலாம். திருச்சி மாவட்ட காவல்துறையின் கீழ் உள்ள காவல் நிலைய எல்லையில் குடியிருப்போா் மட்டுமே விண்ணப்பிக்கலாம்.
மத்திய, மாநில அரசு ஊழியராகவோ, சுயவேலை பாா்ப்பவராகவோ, அரசியல் கட்சியைச் சோ்ந்தவராகவோ இருக்கக் கூடாது. விளையாட்டு வீரா்கள் மற்றும் பேண்ட் வாத்தியம் இசைக்க தெரிந்தவா்களுக்கு முன்னுரிமை மற்றும் உடற்தகுதி தோ்வில் தளா்வு வழங்கப்படும் என திருச்சி மாவட்ட காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது.