இத்தாலியில் சாலையில் திடீரென விழுந்து தீப்பிடித்த சிறிய ரக விமானம்: 2 பேர் பலி
திருச்சியில் பிரதமர் மோடியைச் சந்திக்கிறார் இபிஎஸ்!
திருச்சியில் ஜூலை 26ல் பிரதமர் மோடியை அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி சந்திக்கவிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பிரதமர் நரேந்திர மோடி வருகிற ஜூலை 26 ஆம் தேதி தமிழகம் வருகிறார். பிரிட்டன், மாலத்தீவு நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி அங்கிருந்து ஜூலை 26 ஆம் தேதி இரவு தூத்துக்குடி வருகிறார். விரிவாக்கம் செய்யப்பட்ட தூத்துக்குடி விமான நிலையத்தை திறந்துவைத்த பின்னர் ஜூலை 27 ஆம் தேதி(ஞாயிற்றுக்கிழமை) கங்கை கொண்ட சோழபுரத்தில் ராஜேந்திர சோழனின் திருவாதிரை பிறந்த நாள் விழாவில் கலந்துகொள்கிறார்.
அதற்காக பிரதமர் மோடி, தூத்துக்குடியில் இருந்து திருச்சி விமான நிலையம் செல்கிறார். அங்கு பிரதமர் மோடியை வரவேற்கும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பிரதமர் மோடியுடன் 30 நிமிடங்கள் பேச நேரம் ஒதுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அப்போது தமிழக நலன் சார்ந்த கோரிக்கைகள் அடங்கிய மனுவை பிரதமரிடம் வழங்குவார் என்றும் கூறப்படுகிறது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழகத்தில் அதிமுக - பாஜக கூட்டணி உருவான பின்னர் பிரதமர் மோடியை இபிஎஸ் முதல்முறையாகச் சந்திக்கிறார். இந்த சந்திப்புக்காகதான் எடப்பாடி பழனிசாமியின் சுற்றுப்பயண பிரசாரம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
வருகிற ஜூலை 26 ஆம் தேதி சிவகங்கை மாவட்டத்திற்கு செல்லவிருந்த நிலையில் அது ஜூலை 29 ஆம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
தமிழக பயணத்தின்போது பிரதமரைச் சந்திக்க மேலும் 12 பேர் நேரம் கேட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
அதிமுக - பாஜக கூட்டணியில், தேர்தலுக்குப் பின் கூட்டணி ஆட்சியா, இல்லையா என்பது குறித்து குழப்பம் நீடித்து வரும் நிலையில் பிரதமர் மோடி - எடப்பாடி பழனிசாமி சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.
பிரதமர் மோடி ஜூலை 27 ஆம் தேதி தஞ்சாவூரில் தமிழக பாஜக நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொள்ளவிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.