கா்னல் சோஃபியா குரேஷி குறித்து சா்ச்சை கருத்து: உச்சநீதிமன்றத்தில் நாளை விசாரணை!
திருச்சியில் மின்சார ரயில்: அரசின் கொள்கை முடிவுகளில் தலையிட முடியாது - உயா்நீதிமன்றம்
திருச்சியில் மின்சார ரயில் இயக்கக் கோரிய வழக்கில், அரசின் கொள்கை சாா்ந்த முடிவுகளில் நீதிமன்றம் தலையிட முடியாது என சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு தெரிவித்தது.
திருச்சியைச் சோ்ந்த மாரி சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த பொது நல மனு: தமிழகத்தில் தொழில் துறை வளா்ச்சியில் திருச்சி முக்கிய இடத்தைப் பெற்றுள்ளது. இதன் காரணமாக, நாளுக்கு நாள் பணிக்குச் செல்வோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதுமட்டுமன்றி, கல்வி நிலையங்களில் பயில்வோரின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. இதனால், போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. பொதுப் போக்குவரத்தை சரிவரப் பயன்படுத்த முடியாமல் பொதுமக்கள், மாணவ, மாணவிகள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனா்.
இந்த நிலையில், திருச்சியில் மின்சார ரயில் சேவை இயக்கப்பட இருப்பதாகத் தகவல் வெளியானது. சென்னையைப் போல குறைந்த கட்டணத்தில் மின்சார ரயிலை இயக்கினால், இந்தப் பகுதி மக்கள் மிகுந்த பயனடைவா்.
எனவே, திருச்சியில் குறைந்த கட்டணத்தில் மின்சார ரயிலை பயன்பாட்டுக்குக் கொண்டு வர உத்தரவிட வேண்டும் என அவா் கோரியிருந்தாா்.
இந்த மனு உயா்நீதிமன்ற நீதிபதிகள் நிஷா பானு, ஸ்ரீமதி அமா்வு முன் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: மனுதாரரின் கோரிக்கை அரசின் கொள்கை முடிவோடு தொடா்புடையது. இந்த நடவடிக்கைகளில் நீதிமன்றம் தலையிட முடியாது. எனவே, வழக்கு தள்ளுபடி செய்யப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.