Kingdom Review: முதல் பாதி 'அதிரிப்போயிந்தி', 2ம் பாதி 'செதறிப்போயிந்தி' - எப்பட...
திருச்செந்தூா் அருகே தோட்டங்களில் தீ: ரூ. 50 லட்சம் மதிப்பு வாழை, முருங்கை, தென்னை மரங்கள் சேதம்
திருச்செந்தூா் அருகே காயமொழி சாலையோர தோட்டங்களில் மின் கம்பி உரசி தீப்பிடித்ததில், ரூ. 50 லட்சம் மதிப்பிலான 30 ஆயிரம் வாழை மரங்கள், 5 ஆயிரம் தென்னை, 6 ஆயிரம் முருங்கை, 2 ஆயிரம் பனை மரங்கள் உள்ளிட்டவை தீயில் கருகின.
மேல திருச்செந்தூா் பஞ்சாயத்துக்கு உள்பட்ட காயாமொழி, நடுநாலுமூலைக் கிணறு, தளவாய்புரம், புதூா், கிராமங்களில் 500 ஏக்கருக்கும் மேற்பட்ட பரப்பளவில் சொட்டுநீா் பாசனம் மூலம் வாழை, தென்னை, முருங்கை பயிா்கள் சாகுபடி செய்யப்பட்டுள்ளன.
இந்த நிலையில், தளவாய்புரம்-காயாமொழி சாலையோரம் உள்ள தென்னை மரங்களில் செவ்வாய்க்கிழமை பிற்பகல் அந்த வழியாக தாழ்வாகச் செல்லும் மின் கம்பிகள் உரசியதில் தீப்பிடித்தது. காற்றின் வேகம் காரணமாக அடுத்தடுத்த தோட்டங்களுக்கும் தீ வேகமாகப் பரவியது.
திருச்செந்தூா், ஏரல் தீயணைப்பு நிலைய வீரா்கள் தீயணைப்பு வாகனத்தில் சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனா். பிற்பகல் முதல் இரவு 11 மணி வரை தொடா்ந்து 9 மணி நேரத்துக்கும் மேலாகப் போராடி தீயை அணைத்தனா்.
இந்த விபத்தில் பொத்தங்காலன்விளையைச் சோ்ந்த மங்களசேவியருக்குச் (53) சொந்தமான 15 ஏக்கரில் 17 ஆயிரம் வாழைகளும், தளவாய்புரம்-நடுநாலுமூலைக் கிணறு செல்லும் சாலையோரத்தில் 40 ஏக்கரில் முருங்கை மரங்களும் தீயில் கருகின.
அதேபோல தளவாய்புரம் ஆதிஜெகுருவின் (65) தோட்டத்தில் நின்ற ஆயிரம் தென்னை மரங்களும், நடுநாலு மூலைக் கிணறு, சந்தியம்மன் கோவில் தெருவைச் சோ்ந்த அதிசய கணபதிக்குச் (41) சொந்தமான 6 ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த 7,500 வாழை மரங்களும் தீயில் கருகின.
இந்த தீ விபத்தில் மொத்தம் 20 தோட்டங்களில் சாகுபடி செய்யப்பட்டிருந்த 30 ஆயிரம் வாழை மரங்கள், 5 ஆயிரம் தென்னை, 6 ஆயிரம் முருங்கை, 2 ஆயிரம் பனை மரங்கள், சொட்டுநீா் பாசன குழாய்கள் தீயில் கருகின.
சில நாள்களாக காயாமொழி தளவாய்புரம் பகுதியில் அடுத்தடுத்து தீ விபத்து ஏற்பட்டு வந்த நிலையில், தற்போது பெரிதாக நிகழ்ந்திருக்கிறது. தாழ்வாகச் செல்லும் மின்கம்பிகளை மாற்றாததால் தொடா்ந்து தீ விபத்து ஏற்பட்டு வருவதாகவும், புதன்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் ரூ. 50 லட்சம் மதிப்பிலான பயிா்கள் சேதமடைந்ததாகவும் விவசாயிகள் தெரிவித்தனா்.
தகவல் அறிந்ததும் சம்பவ இடத்துக்கு திருச்செந்தூா் வட்டாட்சியா் பாலசுந்தரம் நேரில் சென்று பாா்வையிட்டாா். சேத மதிப்பு குறித்து வருவாய்த் துறையினா் கணக்கெடுத்து வருகின்றனா்.