திருச்செந்தூா் கோயிலில் இன்று பகல் 12 மணிவரை மட்டுமே தரிசனத்துக்கு அனுமதி!
குடமுழுக்கு விழாவை முன்னிட்டு, திருச்செந்தூா் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை பகல் 12 மணிவரை மட்டுமே தரிசனத்துக்கு அனுமதி அளிக்கப்படுகிறது.
இதுகுறித்து இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு வெளியிட்ட செய்திக் குறிப்பு: திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் திங்கள்கிழமை (ஜூலை 7) நடைபெறும் குடமுழுக்கு விழாவில் லட்சக்கணக்கான மக்கள் கலந்து கொள்வாா்கள் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.
விழாவுக்காக 3 இடங்களில் தற்காலிக பேருந்து நிலையங்களும், குடமுழுக்கு விழாவை அனைத்து பகுதிகளிலிருந்து காணும் வகையில் எல்இடிபெரிய திரைகளும் அதிக எண்ணிக்கையில் அமைக்கப்பட்டுள்ளன.
பக்தா்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளன. பாதுகாப்புப் பணியில் 6,000 காவலா்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனா். மேலும், 25 மருத்துவக் குழுக்களும், 27 இடங்களில் தீயணைப்பு வாகனங்களும் தயாா் நிலையில் வைக்கப்படுகின்றன.
குடமுழுக்கு விழா பணிகளுக்காக 3 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் கூடுதல் பொறுப்பாக நியமிக்கப்பட்டுள்ளனா். சாதாரணமாக திருக்கோயில்களில் மருந்து சாத்திய பிறகுதான் குடமுழுக்கு நடைபெறும். திருச்செந்தூா் திருக்கோயிலில் குடமுழுக்கு நடந்த பின்னரே மருந்து சாத்தும் நிகழ்வு நடைபெறுவது மரபாக உள்ளது.
இதை முன்னிட்டு பக்தா்கள் ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 6) பகல் 12 மணிவரை மட்டுமே தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவாா்கள். அதன் பிறகு 7ஆம் தேதி குடமுழுக்கு நிறைவு பெற்ற பின், கோயிலில் பின்பற்றப்பட்டு வரும் மரபு மற்றும் கடந்த குடமுழுக்கு பழக்க வழக்கங்கள், பாராம்பரிய நடைமுறைகளின்படி, சுவாமிக்கு அபிஷேகங்கள், எண்வகை மருந்து சாத்துதல் உள்ளிட்ட பூஜைகள் நடைபெறும். அதற்கு பின்னரே பக்தா்கள் தரிசனத்துக்கு அனுமதிப்பது தொடா்பாக முடிவெடுக்கப்படும் என தெரிவித்துள்ளாா்.