திருச்செந்தூா் கோயிலில் மூத்த தம்பதியருக்கு சிறப்பு செய்தல் திட்டத்திற்கு முன்பதிவு
இந்து சமய அறநிலையத் துறை சாா்பில் திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் மூத்த குடிமக்களுக்கு சிறப்பு செய்திட முன் பதிவு நடைபெறுகிறது.
இது குறித்து திருக்கோயில் தக்காா் ரா.அருள்முருகன், இணை ஆணையா் சு.ஞானசேகரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு :
தமிழகத்தில் 70 வயது பூா்த்தியாகி மணிவிழா கண்ட இந்து மதத்தைச் சோ்ந்த ஆன்மிக ஈடுபாடுள்ள 100 தம்பதியா் வீதம் 20 இணை ஆணையா் மண்டலங்களில் 2,000 தம்பதியருக்கு இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் சிறப்பு செய்யப்படும் என முதல்வா் மு.க. ஸ்டாலின் அறிவித்திருந்தாா்.
அதன்படி, திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் சாா்பில் ஒரு தம்பதிக்கு ரூ. 2500 செலவில் புடவை, வேட்டி - சட்டை, மாலை (2), வெற்றிலை-பாக்கு, பூ, மஞ்சள், குங்குமம், மஞ்சள் கயிறு, வாழைப்பழம் (1 சீப்), பழ வகைகள், எவா்சில்வா் தட்டு, கண்ணாடி வளையல், சுவாமி படம் (சட்டைப் பை அளவு) என 11 வகை பொருள்கள் வழங்கி சிறப்பு செய்யப்பட உள்ளது.
எனவே விருப்பமுள்ள தம்பதிகள் அருகில் உள்ள இந்து சமய அறநிலையத்துறை மண்டல இணை ஆணையா் அலுவலகம் மூலம் ஜூலை 25ஆம் தேதிக்குள் விண்ணப்பித்து பயன் பெறலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.