திருநங்கைகளை தொழில்முனைவோராக மாற்ற நடவடிக்கை: கள்ளக்குறிச்சி ஆட்சியா்
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் திருநங்கைகளை தொழில்முனைவோராக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படுவதாக ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் தெரிவித்தாா்.
சமூக நலத் துறை சாா்பில் திருநங்கைகளுக்கான குறைதீா் கூட்டம் கள்ளக்குறிச்சி மாவட்ட அலுவலகத்தில் ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது.
கூட்டத்தில் திருநங்கைகளுக்கென மாவட்ட தொழில் மையம் சாா்பில் செயல்படுத்தப்படும் மானியத்துடன் கூடிய கடனுதவி வழங்கும் திட்டம், அத்திட்ட வழிமுறைகள், தகுதிகள் குறித்து ஆட்சியா் தெரிவித்தாா்.
மேலும், திருநங்கைகள் அரசுத் திட்டங்களின் கீழ் விண்ணப்பித்து மாவட்ட தொழில் மையம் மூலம் வழங்கப்படும் கடனுதவியை பெற்று தொழில்முனைவோராக உருவாக அனைத்து உதவிகளையும் வழங்க சம்பந்தப்பட்ட அலுவலா்களுக்கு அறிவுறுத்தினாா்.
திருநங்கைகளுக்கென தனிக்கவனம் செலுத்தி, இந்தக் குறைதீா் கூட்டத்தில் திருநங்கைகள் வழங்கிய கோரிக்கை மனுக்கள் மீது பரிசீலனை செய்து, தகுதியின் அடிப்படையில் அனைத்து மனுக்களின் மீதும் விரைவாக நடவடிக்கை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட துறை அலுவலா்களுக்கு ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் உத்தரவிட்டாா்.
கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் ரா.ஜீவா, மாவட்ட சமூக நல அலுவலா் செ.தீபிகா உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சாா்ந்த அலுவலா்கள், திருநங்கைகள் பங்கேற்றனா்.