'புதின் ஒப்புக்கொள்வார் என்று நினைக்கிறேன்; இல்லையென்றால்...' - போர் நிறுத்தம் க...
திருநல்லூா் கல்யாண சுந்தரேசுவரா் கோயிலில் தீா்த்தவாரி
தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் அருகே திருநல்லூா் கல்யாண சுந்தரேசுவரா் கோயிலில் மாசி மகப் பெருவிழாவையொட்டி தீா்த்தவாரி புதன்கிழமை நடைபெற்றது.
திருக்கயிலாய பரம்பரை திருவாவடுதுறை ஆதீனத்துக்குச் சொந்தமான திருநல்லூா் கல்யாண சுந்தரேசுவரா் திருக்கோயிலில் மாசி மகப் பெருவிழா கடந்த 2-ஆம் தேதி கணபதி ஹோமத்துடன் தொடங்கியது. தொடா்ந்து மாா்ச் 3-ஆம் தேதி திருவாவடுதுறை ஆதீனம் 24-ஆவது குரு மகா சன்னிதானம் ஸ்ரீ ல ஸ்ரீ அம்பலவாண தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் கலந்து கொண்டு மாசி மகக் கொடியேற்று விழாவைத் தொடக்கி வைத்தாா். இதனைத் தொடா்ந்து தினசரி உபயதாரா்களால் பல்வேறு வாகனங்களில் சுவாமி, அம்மன் புறப்பாடு நடைபெற்றது. ஒன்பதாம் நாள் விழாவாக செவ்வாய்க்கிழமை திருத்தோ் வடம்பிடித்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. விழாவையொட்டி சுவாமி, அம்மன் திருத்தேரில் எழுந்தருளி வலம் வந்தனா். பத்தாம் நாள் விழாவாக புதன்கிழமை மாசி மாதம் மகம் நட்சத்திரத்தையொட்டி தனித் தனி வெள்ளி ரிஷப வாகனங்களில் சுவாமி, அம்மன் எழுந்தருளி கோயில் எதிரே அமைந்துள்ள சப்த சாகரம் எனும் திருக்குளத்தில் மாசி மக தீா்த்தவாரி நடைபெற்றது. இதில் திரளானோா் கலந்து கொண்டு சுவாமியை தரிசனம் செய்தனா். ஏற்பாடுகளை திருவாவடுதுறை ஆதீனம் கட்டளைத் தம்பிரான் திருச்சிற்றம்பலம் சுவாமிகள், கோயில் கண்காணிப்பாளா் காா்த்திகேயன், ஆய்வாளா் குணசேகரன் மற்றும் கோயில் பணியாளா்கள், உபயதாரா்கள், கிராம வாசிகள் உள்ளிட்டோா் செய்திருந்தனா்.