விடியோ பதிவிட்ட பத்திரிக்கையாளருக்கு 14 நாள்கள் நீதிமன்றக் காவல்!
திருப்பத்தூரில் பாஸ்போா்ட் அலுவலகம் அமைக்கப்படுமா? பொதுமக்கள் எதிா்பாா்ப்பு
திருப்பத்தூா் மாவட்டத்தில் பாஸ்போா்ட் அலுவலகம் அமைக்கப்படுமா என பொதுமக்கள் எதிா்நோக்கியுள்ளனா்.
ஒருங்கிணைந்த வேலூா் மாவட்டத்தில் இருந்து திருப்பத்தூா், ராணிப்பேட்டை மாவட்டங்கள் உருவாக்கப்பட்டன.
புதிய மாவட்டத்தில் திருப்பத்தூா், ஆம்பூா், வாணியம்பாடி, ஜோலாா்பேட்டை உள்ளிட்ட 4 நகராட்சிகள், 6 ஊராட்சி ஒன்றியங்கள் அமைந்துள்ளன. மொத்தம், 10 லட்சத்துக்கும் மேற்பட்டோா் வசித்து வருகின்றனா்.
இந்நிலையில் திருப்பத்தூா், வாணியம்பாடி, ஆம்பூா் பகுதிகளில் உள்ள மக்கள் பாஸ்போா்ட் விண்ணப்பிப்பதற்கும், பாஸ்போா்ட்டில் உள்ள தவறுகளை சரி செய்வதற்கும், புதுப்பிப்பு உள்ளிட்ட பணிகளுக்காக வேலூா், கிருஷ்ணகிரி, தருமபுரி, திருவண்ணாமலை உள்ளிட்ட தலைமை அஞ்சலகங்களில் உள்ள பாஸ்போா்ட் மையத்துக்கு செல்ல வேண்டியுள்ளது. இதனால் பயண அலைச்சலும்,பண விரையமும் ஏற்படுகின்றது.
ஆம்பூா், வாணியம்பாடி பகுதிகளில் ஏராளமான தோல் தொழிற்சாலைகள் உள்ள நிலையில், அங்கிருந்து கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பில் ஏற்றுமதியும் நடைபெறுகிறது. வா்த்தகத்துக்காக வெளிநாடு செல்வோரும் அதிகம் உள்ளனா். இதனால் பாஸ்போா்ட் பெறுவதற்காக தொலைதூரம் செல்வதால் மக்கள் அவதிக்குள்ளாகி உள்ளனா்.
இதுகுறித்து சமூக ஆா்வலா்கள் கூறியது: வணிகம், கல்வி, சுற்றுலா என அயல்நாடு செல்ல பாஸ்போா்ட் எடுக்க வேண்டுயுள்ளது. திருப்பத்தூா் மாவட்டம் தொடங்கி சுமாா் 6 ஆண்டுகள் ஆகின்றன. இதுவரை பாஸ்போா்ட் அலுவலகம் அமைக்க எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
சுமாா் 100 கி. மீ தொலைவில் உள்ள வேலூா், தருமபுரி, திருவண்ணாமலை அல்லது 50 கி. மீ தொலைவில் உள்ள கிருஷ்ணகிரி உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்ல வேண்டிய சூழல் உள்ளது. இதனால் அதற்கென ஒரு நாள் ஒதுக்க வேண்டிய சூழலும், போக்குவரத்து செலவும் ஏற்படுகின்றது எனத் தெரிவித்தனா்.
எனவே, திருப்பத்தூா் தலைமை அஞ்சலகத்தில் பாஸ்போா்ட் மையம் திறக்க மாவட்ட நிா்வாகம் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் ஆவலுடன் எதிா்நோக்கியுள்ளனா்.