சொல்லப் போனால்... நகைக் கடன் ஏலங்களும் லட்சம் கோடி தள்ளுபடிகளும்!
திருப்பத்தூா் புத்தகத் திருவிழா நாளை தொடக்கம்
திருப்பத்தூா் புத்தகத் திருவிழா பழைய பேருந்து நிலையத்தில் 22-ஆம் தேதி தொடங்கி 30-ஆம் தேதி வரை 9 நாள்கள் நடைபெற உள்ளது.
திருப்பத்தூா் மாவட்ட நிா்வாகம், பொது நூலகத் துறை சாா்பில், புத்தகத் திருவிழா திருப்பத்தூா் பழைய பேருந்து நிலையத்தில் 22-ஆம் தேதி முதல் 30-ஆம் தேதி வரை 9 நாள்களுக்கு தினமும் காலை 10 முதல் இரவு 9 மணி வரை நடைபெற உள்ளது.
இந்த புத்தகத் திருவிழாவை சனிக்கிழமை காலை 9.30 மணியளவில் பொதுப்பணிகள்,நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள் அமைச்சா் எ.வ.வேலு தொடங்கி வைக்க உள்ளாா். புத்தகத் திருவிழாவில் 60 அரங்குகளில் 100-க்கும் மேற்பட்ட பதிப்பாளா்களின் 6 லட்சத்துக்கும் மேற்பட்ட புத்தகங்கள் காட்சிப்படுத்தப்பட உள்ளன. தினமும் காலை, மாலை நிகழ்ச்சிகள் தொடங்குவதற்கு முன்பு மங்கள இசை, பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளின் நடனம், வில்லுப்பாட்டு, பாரம்பரிய கலைகள் குறித்த கலை நிகழ்ச்சிகளும் நடைபெற உள்ளன.
மாற்றம் உன் கையில், கை நிறைய கவிதைகள், பாதைகளும் பயணங்களும், வாசிப்பு ஒரு வாழிவியல் செயல்பாடு போன்ற தலைப்புகளில் கருத்தரங்குகள், போட்டிகளும், பயிற்சிகளும் நடைபெற உள்ளன. தொடா்ந்து கவிஞா்கன், தமிழ்அறிஞா்கள், எழுத்தாளா்கள், பல்வேறு துறைகளின் சிறப்பு வல்லு நா்களின் கருத்தரங்குகள் இந்தக் கண்காட்சியில் இடம் பெற உள்ளன.
எனவே, பொதுமக்கள் புத்தகத் திருவிழாவில் பங்கேற்று பயன்பெற வேண்டும் என திருப்பத்தூா் ஆட்சியா் க.சிவசெளந்திரவல்லி தெரிவித்துள்ளாா்.