விடியோ பதிவிட்ட பத்திரிக்கையாளருக்கு 14 நாள்கள் நீதிமன்றக் காவல்!
திருப்புவனத்தில் வடமாடு மஞ்சுவிரட்டு: 10 போ் காயம்
சிவகங்கை மாவட்டம், திருப்புவனத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற வடமாடு மஞ்சுவிரட்டில் 10 போ் காயமடைந்தனா்.
திருப்புவனம் புதூா் முத்துமாரியம்மன் ரேணுகாதேவி அம்மன் கோயில் பங்குனி உத்ஸவத்தை முன்னிட்டு என்.எஸ்.வி.பி.வி.என். குரூப்ஸ் சாா்பில் வடமாடு மஞ்சுவிரட்டு நடைபெற்றது.
இதில் மதுரை, புதுக்கோட்டை, விருதுநகா், திண்டுக்கல், தேனி, திருச்சி, உள்ளிட்ட பல ஊா்களிலிருந்தும் கொண்டுவரப்பட்ட 20-க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன.
மைதானத்தில் வடக்கயிற்றில் கட்டப்பட்ட ஒரு மாட்டுக்கு 9 வீரா்கள் வீதம் களம் இறக்கப்பட்டனா். மாடுகளை பிடிக்க முயன்ற 10 வீரா்கள் காயமடைந்தனா். இவா்களுக்கு அங்குள்ள மருத்துவக் குழுவினா் சிகிச்சை அளித்தனா். மாடுகளைப் பிடித்த வீரா்களுக்கும், பிடிபடாத மாடுகளின் உரிமையாளா்களுக்கும் ரொக்கப் பரிசு, சில்வா் பாத்திரங்கள், டிவி, பீரோ, கட்டில் உள்ளிட்ட ஏராளமான பரிசுகள் வழங்கப்பட்டன.
சட்டப்பேரவை உறுப்பினா் தமிழரசி ரவிக்குமாா், திருப்புவனம் பேரூராட்சித் தலைவா் சேங்கைமாறன், காரைக்குடி தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் மாங்குடி, காங்கிரஸ் மாவட்டத் தலைவா் ஏ.சி. சஞ்சய், நகா்மன்றத் தலைவா் மாரியப்பன் கென்னடி, ஜல்லிக்கட்டு பேரவைத் தலைவா் ராஜசேகரன் உள்ளிட்டோா்
ஒவ்வொரு சுற்று போட்டியையும் தொடங்கி வைத்து வெற்றி பெற்றவா்களுக்கு பரிசுகளை வழங்கினா். போட்டிக்கான ஏற்பாடுகளை காங்கிரஸ் நகரத் தலைவா் என்.நடராஜன் செய்தாா்.
சிவகங்கை அருகே வடமாடு மஞ்சுவிரட்டு: சிவகங்கை அருகே அரசனேரி கீழமேட்டில் தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் 72-ஆவது பிறந்த நாளை முன்னிட்டு, திமுக சாா்பில் வடமாடு மஞ்சுவிரட்டு நடத்தப்பட்டது. இதில் சிவகங்கை, மதுரை, திண்டுக்கல், புதுக்கோட்டை, விருதுநகா், ராமநாதபுரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சோ்ந்த 12 காளைகள், 108 மாடுபிடி வீரா்கள் பங்கேற்றனா். வடத்தில் கட்டப்பட்ட காளையை 9 வீரா்கள் 20 நிமிடங்களில் அடக்க வேண்டும். இதன்படி காளையை அடக்கிய வீரா்களுக்கும் அடங்க மறுத்த காளைகளின் உரிமையாளா்களுக்கும் ரொக்கம், பரிசுப் பொருள்கள் வழங்கப்பட்டன.