உதவி மக்கள் தொடர்பு அலுவலர் பணியிடங்களுக்கு தகுதியற்ற திமுக ஐ.டி. பிரிவு பணியாளர...
திருப்புவனம் அஜித்குமார் குடும்பத்துக்கு நயினார் நாகேந்திரன் ஆறுதல்!
காவல்துறை விசாரணையில் பலியான அஜித்குமார் இல்லத்துக்கு தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் நேரில் சென்று இன்று (ஜூலை 2) ஆறுதல் தெரிவித்தார்.
முன்னதாக, வீட்டில் இருந்த அஜித்குமார் படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். அப்போது, அவருடன் கட்சி நிர்வாகிகளும் உடனிருந்தனர்.
இதுகுறித்து, அவர் தனது எக்ஸ் பக்கத்தில், திருப்புவனத்தில் காவல்துறையால் கொலைசெய்யப்பட்ட அஜித்குமாரின் வீட்டுக்குச் சென்று, அவரின் உருவப்படத்துக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினேன். மேலும் அவரது பிரிவால் வாடும் அவர்களது குடும்பத்தினரைச் சந்தித்து ஆறுதல் கூறினேன். அனைத்து வகையிலும், அஜித் குமாரின் குடும்பத்துடன் தமிழக பாஜக துணை நிற்கும் என்றும் உறுதி அளித்தேன். அஜித் குமாரின் ஆன்மா சாந்தியடைய எல்லாம்வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன் என்று பதிவிட்டுள்ளார்.

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் மடப்புரம் கோயிலுக்கு வந்த பக்தரின் நகை காணாமல்போன விவகாரத்தில் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட கோயில் காவலாளி அஜித்குமார் காவல்துறையினரின் விசாரணையின்போது பலியானார். ஆனால், அஜித் குமார் வலிப்பு ஏற்பட்டு உயிரிழந்ததாக காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இச்சம்பவத்தில் உடனடியாக விசாரணை நடத்தி நீதி கிடைக்கச் செய்ய வேண்டும் என தமிழநாடு முழுவதும் எதிர்ப்புகள் எழுந்த நிலையில், சிபிஐ விசாரணைக்குத் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இதனிடையே, அஜித்குமாரின் வீட்டுக்குச் சென்று, அவரது குடும்பத்தினருக்கு தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யும் ஆறுதல் தெரிவித்தார். மேலும், தவெக சார்பில் ரூ. 2 லட்சம் நிவாரணமும் அளித்தார்.