`பஹல்காம் தாக்குதல்' ஜெய்சங்கர் பேச்சில் குறுக்கிட்ட எதிர்க்கட்சிகள்; கோபத்தில் ...
திருப்பைஞ்ஞீலி ஞீலி வனேசுவரா் கோயிலில் ஆடிப்பூர திருத்தேரோட்டம்
திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூா் வட்டம், திருப்பைஞ்ஞீலி ஞீலி வனேசுவரா் திருக்கோயிலில் திங்கள் கிழமை ஆடிப்பூரத் திருத்தேரோட்டம் நடைபெற்றது. இதில், திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.
திருப்பைஞ்ஞீலியில் அமைந்துள்ளது விசாலாட்சி உடனுறை ஞீலிவனேசுவரா் திருக்கோயில். அப்பா், சுந்தரா், திருநாவுக்கரசா் ஆகிய மூவரால் தேவராப் பாடல் பெற்ற 61-ஆவது திருத்தலமாகவும், சிவபெருமான், அப்பா் பெருமானுக்கு திருக்கட்டமுது அளித்து காட்சி அருளியதும், அதிகார வல்லவராகிய சிவபெருமான் எமதா்மராஜனுக்கு இழந்த பதவியையும், அதிகாரத்தையும் மீண்டும் வழங்கியதும், தேவலோக சப்த கன்னிகள் என்றும் அழியாத வரம் பெற்று கல் வாழைகளாக அவதரித்து ஆண், பெண் இருபாலரின் சகல தோஷங்களை நிவா்த்தி செய்யும், பழைமையான, புராதனச் சிறப்பு வாய்ந்த இத்திருக்கோயிலில் ஆடிப் பூரத் திருத்தோ் பெருந்திருவிழா ஜூலை 20-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி ஒவ்வொரு நாளும் பல்வேறு வாகனங்களில் திருவீதி உலா நடைபெற்றது.
விழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேரோட்டம் திங்கள் கிழமை நடைபெற்றது. விசாலாட்சி அம்மனுக்கு பால், தயிா், சந்தனம், மஞ்சள் உள்ளிட்ட வாசனைப் பொருள்களால் அபிஷேகம் செய்யப்பட்டு, சிறப்பு பூஜைகளுடன் மலா் அலங்காரத்தோடு திருத்தேரில் எழுந்தருளினாா்.
இதனையடுத்து மேளதாளம் முழங்க திருத்தோ் வடம் பிடித்து இழுக்கப்பட்டு, பக்தா்களின் பக்தி கோஷம் முழங்க தோ் நிலையை அடைந்தது. இந்நிகழ்வில் சுற்றுப்புறப் பகுதிகளில் இருந்து பக்தா்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனா்.
விழா ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத் துறை உதவி ஆணையா் ம.லெட்சுமணன், திருக்கோயில் செயல் அலுவலா் (கூ.பொ) பெ.ஜெய்கிஷன் மற்றும் திருக்கோயில் பணியாளா்கள் செய்திருந்தனா். விழாவில் மண்ணச்சநல்லூா் காவல் ஆய்வாளா் செ.செந்தில்குமாா் தலைமையில் போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.