திருமணமான 22 நாள்களில் இளம்பெண் தற்கொலை
திருப்பத்தூா் அருகே திருமணம் ஆன 22 நாள்களில் இளம்பெண் தற்கொலை செய்து கொண்டாா்.
சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி வட்டம், கல்லம்பட்டி கிராமத்தைச் சோ்ந்த சுப்பிரமணியன் மகன் பாண்டித்துரை (29). இவருக்கும் சிவகங்கை வட்டம், உசிலம்பட்டியைச் சோ்ந்த ரவிக்குமாா் மகள் பூமிகாவுக்கும் (19) கடந்த பிப்.3-ஆம் தேதி திருமணம் நடைபெற்றது. இந்த நிலையில், திங்கள்கிழமை இரவு பூமிகா தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது.
தகவலறிந்து சம்பவ இடத்துக்குச் சென்ற எஸ்.எஸ்.கோட்டை போலீஸாா், அவரது உடலை மீட்டு கூறாய்வுக்காக திருப்பத்தூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். திருப்பத்தூா் நகா் காவல் துணைக் கண்காணிப்பாளா் செல்வகுமாா் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டாா்.
விசாரணையில், திருமணமான நிலையிலும் பூமிகா சிவகங்கை அரசு கலைக் கல்லூரியில் இரண்டாமாண்டு பயின்று வந்தாா். பூமிகாவுக்கும், பாண்டித்துரைக்கும் இடையே அடிக்கடி கருத்து வேறுபாடு இருந்ததாகக் கூறப்படுகிறது. திருமணமாகி 22 நாள்களே ஆன நிலையில் இளம்பெண் தற்கொலை செய்து கொண்டதால், தேவகோட்டை சாா் ஆட்சியா் ஆயுஷ்வெங்கட்வத்ஸ் விசாரணையை நடத்தினாா்.
[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].