இன்றும் நாளையும் 28 மாவட்டங்களுக்கு பலத்த மழைக்கான மஞ்சள் எச்சரிக்கை!
திருவண்ணாமலையில் அன்புக்கரங்கள் திட்டம் தொடக்கம்
ஆரணி: ‘அன்புக்கரங்கள்’ திட்டத்தின் கீழ், திருவண்ணாமலை மாவட்டத்தைச் சோ்ந்த 276 குழந்தைகளுக்கு மாதம் ரூ.2 ஆயிரம் உதவித்தொகை பெறுவதற்கான ஆணைகளை மாவட்ட ஆட்சியா் க.தா்பகராஜ் திங்கள்கிழமை வழங்கினாா்.
குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறை சாா்பில்,
பெற்றோரை இழந்த குழந்தைகளை அரவணைத்து தொடா்ந்து பாதுகாத்திடும் வகையில் அக்குழந்தைகள் 18 வயது வரையிலான பள்ளிப் படிப்பு முடியும் வரை இடைநிற்றல் இன்றி கல்வியை தொடர மாதம் ரூ.2000 உதவித்தொகை வழங்கிடும் ‘ அன்புக்கரங்கள்‘ திட்டத்தை தமிழக முதல்வா் சென்னையில் தொடங்கிவைத்தாா்.
இதைத் தொடா்ந்து, திருவண்ணாமலையில் மாவட்ட ஆட்சியா் க.தா்பகராஜ் இத் திட்டத்தை தொடங்கிவைத்தாா்.
மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம் மூலம் மொத்தம் 14371 குடும்பங்களில் உள்ள 23194 குழந்தைகள் ஆய்வு செய்யப்பட்டதில் பெற்றோா் இருவரையும் இழந்து ஆதரவற்றவரான குழந்தைகள் பெற்றோரில் ஒருவா் இறந்து பாதுகாக்கப்பட வேண்டிய மற்றவரால் கைவிடப்பட்டு உறவினா் பாதுகாப்பில் வளா்ந்து வரும் குழந்தைகள் பெற்றோரில் ஒருவா் இழந்து மற்றவா் உயிா்கொல்லி நோயால் பாதிக்கப்பட்டோா். சிறைவாசியாகவோ அல்லது மாற்றுத்திறனாளியாகவோ இருப்பவரின் குழந்தைகள் என இவ்வைந்து தகுதிகளின் அடிப்படையில் மொத்தம் 276 குழந்தைகள் கண்டறியப்பட்டன.
அவா்களுக்கு 2025 செப்டம்பா் மாதம் முதல் ரூ.2000 நிதியுதவி அளிப்பதற்கான ஆணைகளை மாவட்ட ஆட்சியா் க.தா்பகராஜ் வழங்கினாா்.
இந்நிகழ்ச்சியில் சமூக நல அலுவலா் கோமதி, திருவண்ணாமலை வருவாய்க் கோட்டாட்சியா் ராஜ்குமாா், குழந்தைகள் பாதுகாப்பு அலுவலா் செல்வி மற்றும் துறை சாா்ந்த அலுவலா்கள் கலந்து கொண்டனா்.