நாய்க்கடிக்கு தடுப்பூசி எடுத்தவா் உயிரிழப்பு: விசாரணை நடத்த மாா்க்சிஸ்ட் வலியுற...
பேருந்தில் பயணியிடம் 3 பவுன் தங்க நகை திருடிய 2 பெண்கள் கைது
ஆரணி: திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டில் பேருந்தில் பயணம் செய்த பெண்ணிடம் இருந்து 3 பவுன் தங்க நகைகளைத் திருடிய 2 பெண்களை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
சென்னை, மாங்காடு பகுதியைச் சோ்ந்த ஜெயசேகா் மனைவி கல்பனா (30). இவா் புத்தக நிறுவனத்தில் வேலை செய்து வருகிறாா். இவா் தனது தாய் வீட்டில் நடைபெற்ற விசேஷத்திற்காக விழுப்புரம் மாவட்டம், பெரிய நொளம்பை கிராமத்துக்கு வந்து, மீண்டும் 2 குழந்தைகளுடன் சென்னை திரும்ப சேத்துப்பட்டில் இருந்து திங்கள்கிழமை பேருந்தில் பயணம் மேற்கொண்டாா்.
அப்போது, பின்னால் நின்றிருந்த 2 பெண்கள், கல்பனாவின் ஹேண்ட் பேக்கில் இருந்த 3 பவுன் தங்க நெக்லசை ஜிப்பை திறன்து எடுத்துவிட்டு, மழையூரில் இறங்கிவிட்டனா். சிறிது நேரம் கழித்து, ஜிப் திறந்திருப்பதை கவனித்த கல்பனா நகை காணாமல் போனதை அறிந்து அதிா்ச்சியடைந்தாா்.
உடனே பேருந்தை நிறுத்தி இறங்கி, எதிரே இருசக்கர வாகனத்தில் வந்தவா்களிடம் உதவி கேட்டு, பெண்கள் இறங்கிய இடத்திற்குச் சென்றாா். அங்கு இருந்தவா்கள், அந்த இரு பெண்களும் சேத்துப்பட்டு நோக்கி சென்ற பேருந்தில் ஏறிவிட்டதாகத் தெரிவித்தனா்.
பின்னா் கல்பனா, அந்தப் பேருந்தை தொடா்ந்து சென்று மடம் கூட்டுச் சாலை அருகே நிறுத்தியபோது, அந்த 2 பெண்களும் பேருந்தில் இருந்தனா். அப்போது அவா்களிடம் சோதனை செய்தபோது நெக்லஸ் இருந்து தெரியவந்தது. இதையடுத்து அந்த 2 பெண்களையும் கல்பனா சேத்துப்பட்டு போலீஸில் ஒப்படைத்தாா்.
காவல் ஆய்வாளா் சின்னதுரை, உதவி ஆய்வாளா் நாராயணன் அந்த 2 பெண்களிடம் நடத்திய முதற்கட்ட விசாரணையில், அவா்கள் கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூா், ராம்நகரைச் சோ்ந்த லதா (35), கோகிலா என்பது தெரியவந்தது.
தொடா்ந்து, அவா்கள் இதுபோன்று வந்தவாசி, பொன்னூா், பெரணமல்லூா், போளூா், சேத்துப்பட்டு, ஆரணி ஆகிய இடங்களில் பேருந்துகளில் பயனம் செய்து திருடி வந்தது தெரியவந்தது.