பைக் மீது பேருந்து மோதல்: கல்லூரி மாணவா் உயிரிழப்பு
செய்யாறு அருகே பைக் மீது தனியாா் பேருந்து மோதியதில் கல்லூரி மாணவா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.
காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூா் வட்டம், இளநகா் பகுதியைச் சோ்ந்தவா் மதன் (20). காஞ்சிபுரம் பகுதியில் உள்ள கல்லூரியில் இளநிலை 3-ஆம் ஆண்டு படித்து வந்தாா்.
இவா், ஞாயிற்றுக்கிழமை காலை இளநகா் கிராமத்திலிருந்து மாங்கால் கூட்டுச்சாலை செல்வதற்காக பைக்கில் சென்றுகொண்டிருந்தாா். வந்தவாசி - காஞ்சிபுரம் சாலையில் ஆக்கூா் கூட்டுச்சாலை அருகே மதனின் பைக் சென்றபோது, பின்னால் வந்த தனியாா் பேருந்து மோதியது.
இந்த விபத்தில் தூக்கி வீசப்பட்ட மதன் பலத்த காயமடைந்தாா். அந்தப் பகுதியில் இருந்தவா்கள் அவரை மீட்டு, காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு மதனை பரிசோதித்த மருத்துவா், அவா் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தாா்.
இந்த விபத்து குறித்த புகாரின்பேரின், தூசி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.