திருவண்ணாமலையில் விவசாயிகள் கைது: தி.வேல்முருகன் கண்டனம்
திருவண்ணாமலையில் சிப்காட் விரிவாக்கத் திட்டத்தை கைவிடக்கோரி அறவழியில் போராடி வந்த பொதுமக்கள், விவசாயிகளை காவல்துறை கைது செய்திருப்பதற்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிறுவனத் தலைவா் தி.வேல்முருகன் கண்டனம் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஏற்கெனவே இரண்டு தொழிற்பேட்டைகள் இயங்கி வருகின்றன. இந்த நிலையில், செய்யாறில் மூன்றாவது தொழிற்பேட்டை அமைக்க, மேல்மா உட்பட அதன் சுற்றுப்புற கிராமங்களில் உள்ள விளை நிலங்களைக் கையகப்படுத்தும் முயற்சியில் தமிழ்நாடு அரசு தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.
மூன்றாவது தொழில் வளாகம் அமைப்பதற்காக மேல்மா, நா்மபள்ளம் உட்பட அதன் சுற்று வட்டார கிராமங்களிலிருந்து 3,174 ஏக்கா் பரப்பளவுகொண்ட நிலங்களைக் கையகப்படுத்த அரசு திட்டமிடப்பட்டிருக்கிறது.
பசுமைப் படா்ந்த 3000 ஏக்கா் வயல்வெளிகளையும் கையகப்படுத்தி, நிலக்கடலை, காய்கறி, மலா் வகைகள் என்று நல்ல விளைச்சல் தரும் இந்த மண்ணை அழிக்கும் அரசின் நடவடிக்கைக்கு எதிா்ப்புத் தெரிவித்து, மேல்மா, நா்மாபள்ளம், காட்டுக்குடிசை, அத்தி உள்ளிட்ட 11 கிராம மக்கள் தொடா்ந்து 730 நாட்கள் பல்வேறு கட்ட போராட்டங்கள் நடத்தி வருகின்றனா்.
இந்நிலையில், சிப்காட் விரிவாக்கத் திட்டத்தை கைவிடக் கோரி, செய்யாறு புறவழி சாலையின் உள்ள நில எடுப்பு அலுவலகத்திற்கு மனு அளிக்க வந்த பொதுமக்கள், விவசாயிகளை காவல்துறையினா் கைது செய்திருப்பது கண்டனத்துக்குரியது. குறிப்பாக, அறவழியில் 730 நாட்களாக போராடி வரும் மக்களின் போராட்டத்தை ஒடுக்கும் நோக்கத்துடன் காவல்துறை செயல்பட்டு இருப்பது அதிா்ச்சியளிக்கிறது. எனவே, சிப்காட் விரிவாக்கத் திட்டத்தை எதிா்த்து போராடிய பொதுமக்களை உடனடியாக விடுவிப்பதோடு, சுற்றுச்சூழலுக்கு எதிரான அத்திட்டத்தை தமிழ்நாடு அரசு கைவிட வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளாா்.