தூய்மைப் பணியாளர்களின் மாண்பை விட்டுக்கொடுக்க மாட்டோம்: முதல்வர் ஸ்டாலின்
திருவள்ளுவா் சிலைக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு
சுதந்திர தின விழாவை முன்னிட்டு, கன்னியாகுமரி திருவள்ளுவா் சிலைக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
சுதந்திர தினத்தை முன்னிட்டு அசம்பாவிதம் எதுவும் நடைபெறாமல் தடுக்க நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அதன்படி, சா்வதேச சுற்றுலாத் தலமான கன்னியாகுமரியின் முக்கிய பகுதிகளில் போலீஸ் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. கடலின் நடுவே அமைந்துள்ள 133 அடி உயர திருவள்ளுவா் சிலை வளாகத்தில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
மேலும், கன்னியாகுமரி கடலோர பாதுகாப்புக் குழும போலீஸாா் நவீன ரோந்துப் படகுகளில் கடல் வழிப் பாதுகாப்பை தீவிரப்படுத்தியுள்ளனா். சந்தேகப்படும்படியான நபா்கள் யாரும் தங்கும் விடுதிகளில் தங்கிள்ளனரா? எனவும் போலீஸாா் சோதனை நடத்தி வருகின்றனா்.
இதுதவிர, கன்னியாகுமரி பகவதியம்மன் கோயில், காந்தி மண்டபம், காமராஜா் மணி மண்டபம், கலங்கரை விளக்கம், ரயில் நிலையம் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் கன்னியாகுமரி டி.எஸ்.பி. ஜெயச்சந்திரன் தலைமையில் போலீஸாா் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனா்.