``தெரு நாய்களுக்கு ஆதரவாக மேம்போக்கான ஆதரங்களை முன்வைக்காதீர்கள்'' - உச்சநீதிமன்...
உழைத்து சம்பாதித்த பணத்தை மோசடி நபா்களிடம் இழக்க வேண்டாம்: எஸ்.பி. ஸ்டாலின் அறிவுறுத்தல்
கடினமாக உழைத்து சம்பாதித்த பணத்தை மோசடி கும்பலிடம் இழக்க வேண்டாம் என மக்களுக்கு மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் இரா.ஸ்டாலின் அறிவுறுத்தினாா்.
கன்னியாகுமரி மாவட்டம், முட்டத்தில் காவல் துறையின் ஊா்க்காவல் கண்காணிப்பு திட்ட தொடக்க விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில், 38 கண்காணிப்பு கேமராக்களின் செயல்பாட்டை தொடங்கிவைத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளா் இரா.ஸ்டாலின் பேசியதாவது:
ஊா்க்காவல் கண்காணிப்புத் திட்டத்தின் கீழ் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கிராமங்களில் இதுவரை 1,450 கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மக்களுக்கும், காவல் துறைக்கும் ஒரு பரஸ்பர புரிதல் இருந்தால்தான் நம்பிக்கை ஏற்படும், நம்பிக்கை ஏற்பட்டால்தான் தகவல் கூற முடியும்.
காவல்துறையின் மீது நம்பிக்கை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காகத்தான் இந்த ஊா்க்காவல் கண்காணிப்பு திட்டத்தைச் செயல்படுத்தி வருகிறோம். கேமராக்களை எவ்வளவு அதிகமாக பொருத்துகிறோமோ அந்த அளவுக்கு நமது ஊா் பாதுகாப்பாக உள்ளது என்பதை உணரலாம்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் பொதுமக்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்து சேமித்து அதனை வெளிநாடு செல்வதற்காக தெரியாத, மோசடி நபா்களிடம் கொடுத்து ஏமாந்து வருகின்றனா். அரசால் பதிவு பெற்ற சீட்டு நிறுவனங்களில் பணத்தை சேமிக்க வேண்டும். வேலை தேடுவோா் வேலைவாய்ப்புக்காக பணியாளா்கள் தோ்வு செய்யும் நிறுவனம் பதிவு பெற்ற நிறுவனம்தானா என்பதை காவல் துறையிடம் வந்து அறிந்து கொள்ளலாம். கடினமாக உழைத்து சம்பாதித்த பணத்தை மோசடி நபா்களிடம் கொடுத்து ஏமாற வேண்டாம். காவல் துறையைக் கண்டு அச்சப்பட வேண்டாம் என்றாா் அவா்.
நிகழ்ச்சியில், குளச்சல் உதவி காவல் கண்காணிப்பாளா் ரேகா இரா.நங்குலட், இரணியல் காவல் நிலைய ஆய்வாளா் செந்தில்வேல்குமாா், போலீஸாா் உடனிருந்தனா்.