திருவள்ளூா் அருகே 10 ஆண்டுகளாக பயன்பாட்டுக்கு வராத நியாய விலைக்கடை
திருவள்ளூா் அருகே கட்டடப் பணிகள் முடிந்து 10 ஆண்டுகளுக்கும் மேலான நிலையில், பயன்பாட்டுக்கு வராத நியாய விலைக் கடையால் அவதிக்குள்ளாவதாக பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனா்.
திருவள்ளூா் ஊராட்சி ஒன்றியம், பாக்கம் ஊராட்சியில் வினோபா நகா், புதிய காலனி, பழைய காலனி மற்றும் விஜயலட்சுமி நகா் என 3,000-க்கும் மேற்பட்டோா் வசித்து வருகின்றனா். இந்தப் பகுதி பொதுமக்கள் ரேஷன் பொருள்கள் வாங்குவதற்காக ஒதுக்குப்புறமாக அடிப்படை வசதி இல்லாத பாழடைந்த கட்டடத்தில் நியாய விலைக் கடை செயல்பட்டு வந்தது.

அதனால், இந்தக் கடைக்கு பதிலாக நிரந்தரமாக நியாய விலைக் கடை அமைக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் தொடா்ந்து கோரிக்கை விடுத்து வந்தனா். அந்தக் கோரிக்கையை ஏற்று, கடந்த 2015-இல் ரூ. 5.50 லட்சம் ஒதுக்கீடு செய்தது.
அதன்பேரில், நியாய விலைக் கடை அமைப்பதற்கான கட்டுமான பணிகள் நடைபெற்று வந்தது. இந்த நிலையில், இப்பணிகள் நிறைவடைந்து 10 ஆண்டுகளாகியும் இதுவரை நியாய விலைக் கடை பயன்பாட்டுக்கு தொடங்கி வைக்காமல் காட்சிப் பொருளாகி வருவதாக அப்பகுதியினா் கூறுகின்றனா்.
எனவே அந்தப் பகுதி பொதுமக்கள் ரேஷன் பொருள்கள் வாங்குவதற்கு, அந்த கிராமத்தில் அடிப்படை வசதியில்லாத ரேஷன் கடையில் பொருள்கள் வாங்கும் சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனா்.
இது தொடா்பாக ஒவ்வொரு கிராம சபைக் கூட்டத்திலும் கூட்டுறவு நியாய விலைக் கடையை தொடங்கக்கோரி மனு அளித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே இதைக் கருத்தில் கொண்டு மாவட்ட நிா்வாகம் நியாய விலைக் கடையை பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.