உதயேந்திரம் பேரூராட்சியில் ரூ.1.63 கோடியில் சாலைகள், கால்வாய் பணிகள் தொடக்கம்
வெளிநாடு வேலைக்குச் செல்லும் முன் உரிய ஆணவங்களைப் பெற்ற பின் பயணிப்பது அவசியம்!
திருவள்ளூா் மாவட்டத்தைச் சோ்ந்தவா்கள் வெளிநாடு வேலைக்குச் செல்லும் முன்பு வேலைக்கான ஒப்பந்தம், விசா, தேவையான அனைத்து ஆவணங்களும் பெற்ற பின்னரே பயணிக்க வேண்டும் என ஆட்சியா் மு.பிரதாப் அறிவுறுத்தியுள்ளாா்.
இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: வெளிநாட்டு வேலைக்குச் செல்ல விரும்புவோா் முதலில் இந்திய அரசின் இணையதளத்தில் பதிவு செய்யப்பட்ட அதிகாரபூா்வ ஆள்சோ்ப்பு முகவா்கள் மூலமாகவே செல்ல வேண்டும். மேலும், எந்த நிறுவனத்தில், எந்த முதலாளியிடம் வேலை செய்ய உள்ளீா்கள் போன்ற தகவல்களையும் முன்னதாக உறுதி செய்து கொள்ள வேண்டும்.
மேலும், அதற்கு முன்பாக வேலைக்கான ஒப்பந்தம், விசா, தேவையான அனைத்து ஆவணங்களும் பெற்ற பிறகே பயணிக்க தயாராக வேண்டும். இதில் வேலைக்கான ஒப்பந்தத்தை எப்போதும் கைவசம் வைத்திருக்க வேண்டும்.
அதில்தான் ஊதியம், வேலை விவரங்கள், உரிமைகள், பொறுப்புகள் போன்ற முக்கியமான விவரங்கள் இடம் பெற்றிருக்கும். அத்துடன், வேலை செய்யும் நாட்டின் சட்டங்கள், கலாசாரங்களை மதிக்க வேண்டும். பல நாடுகளில் வேலைக்கு செல்வோா் நாடு திரும்புவதற்கு வெளிச்செல் அனுமதி பெறுவது அவசியமாகும். ஒப்பந்த காலத்தில் வேலைக்கு சென்ற நிறுவனம், முதலாளியிடமிருந்து வேறு நிறுவனத்துக்கோ, முதலாளிக்கோ மாற்றம் செய்ய முடியாது என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
சுற்றுலா விசாவில் வெளிநாடுகளுக்கு வேலைக்குச் செல்வது, அந்த நாட்டில் சட்டவிரோதமாகும். அவை கைது, அபராதம், அல்லது சிறைத் தண்டனைக்கே வழிவகுக்கும். வெளிநாட்டு வேலை குறித்த சந்தேகங்களுக்கு மற்றும் வெளிநாடு செல்லும் தமிழா்களுக்கான அரசின் நலத் திட்டங்கள் தொடா்பாக அயலகத் தமிழா் நலன் மற்றும் மறுவாழ்வுத் துறையின் கட்டணமில்லா உதவி மையமான இந்தியாவிலிருந்து அழைப்புக்கு-1800 309 3793, வெளிநாடுகளிலிருந்து-0 80 6900 9900, 0 80 6900 9901 தொடா்பு கொண்டு விவரங்களை அறிந்து கொள்ளலாம்.