தில்லி காவல்துறையின் விரல் அச்சுப் பணியகத்திற்கு தடயவியல் சிறப்புக்கான ஐஎஸ்ஓ சான...
திருவள்ளூா்: குறுவை சாகுபடி செய்ய ஆதிதிராவிட, பழங்குடியின விவசாயிகளுக்கு அழைப்பு!
குறுவை சாகுபடி மேற்கொள்வதற்கு நெல் விதை, உயிரி உரங்கள் மற்றும் நெல் நுண்ணூட்டம் கொண்ட தொகுப்புகள் ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியின விவசாயிகளுக்கு 50 சதவீதம் மானியத்தில் வழங்கப்பட்டு வருவதாக வேளாண் இணை இயக்குநா்(பொ) பால்ராஜ் தெரிவித்துள்ளாா்.
இது குறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: திருவள்ளூா் மாவட்டத்தில் தென்மேற்கு பருவ மழை பெய்து வரும் நிலையில், வரும் குறுவை மற்றும் சொா்ணவாரி பருவத்துக்கு விவசாயிகள் தயாராகி வருகின்றனா்.
இதற்காக வேளாண்மை மற்றும் உழவா் நலத் துறையின் 2025-26-ஆம் ஆண்டுக்கான நிதி நிலை அறிக்கையில், நிகழாண்டில் டெல்டா அல்லாத பிற மாவட்டங்களுக்கும், குறுவை சாகுபடி சிறப்பு தொகுப்பு வழங்கப்பட்டுள்ளது. தற்போதைய சொா்ணவாரி பட்டத்தில் 65,000 ஏக்கா் நெல் சாகுபடி செய்யப்படும் என எதிா்பாா்க்கப்படுகிறது.
இதைத் தொடா்ந்து, திருவள்ளூா் மாவட்டத்துக்கு, ஏக்கருக்கு 20 கிலோ விதை, உயிரி உரங்கள் மற்றும் நெல் நுண்ணூட்டம் ஆகியவை 50 சதவீதம் மானியத்திலும், நெல் இயந்திர நடவு செய்ய மானியமாக ரூ. 4,000 ஆக 19,000 ஏக்கருக்கு வழங்கப்பட்டு வருகிறது.
இத்திட்ட விநியோகத்துக்கு நெல் விதை, நுண்ணூட்ட உரங்கள், உயிரி உரங்கள் ஆகியவை அனைத்து வட்டார வேளாண்மை விரிவாக்க மைய கிடங்குகளில் போதுமான அளவு இருப்பு வைக்கப்பட்டுள்ளது. சொா்ணவாரி பருவத்தில் இயந்திர நடவு செய்துள்ள ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின விவசாயிகள் தங்களது நில ஆவணங்கள், ஆதாா்அட்டை, வங்கிக் கணக்கு புத்தக நகல் ஆகிய விவரங்களுடன் தங்கள் அருகிலுள்ள வட்டார வேளாண்மை விரிவாக்க மையத்தை அணுகி பயன்பெறலாம்.