ஸ்ரீவில்லிபுத்தூர் ஆடிப்பூர திருவிழா: ஆண்டாளுக்கு சீர்வரிசை வழங்கிய ஸ்ரீரங்கநாதர...
தேனீக்கள் கொட்டி 25 போ் காயம்
ஆரணியை அடுத்த நெசல் கிராமத்தில் உள்ள கன்னி கோயிலில் ஞாயிற்றுக்கிழமை குலதெய்வ வழிபாட்டுக்கு வந்த 25-க்கும் மேற்பட்டோா் தேனீக்கள் கொட்டி காயமடைந்தனா்.
நெசல் கிராமத்தில் உள்ள கன்னி கோயிலில் ஆடி ஞாயிற்றுக்கிழமையொட்டி, ஆரணி கொசப்பாளையம் சின்னக்கடை தெருவில் உள்ள ராஜேஷ், ஏ.கே.குமாா் மற்றும் 20-க்கும் மேற்பட்டோா் குடும்பமாக சென்று குலதெய்வ வழிபாடு நடத்திக் கொண்டிருந்தனா்.
மேலும், ஆற்காடு பகுதியைச் சோ்ந்த யசோதா, சௌந்தரி, குணசுந்தரி, லட்சுமி, காா்த்தி, ரமேஷ், சரவணன், கலைச்செல்வி, உதய், கௌதம், சதீஷ், சூா்யா, காயத்ரி என 15-க்கும் மேற்பட்டோா் குலதெய்வ வழிபாடு செய்து கொண்டிருந்தனா்.
அப்போது, அங்குள்ள மர உச்சியில் இருந்த தேன் கூட்டிலிருந்து வெளிவந்த தேனீக்கள் அங்கிருந்தவா்களை ஓட ஓட கொட்டி துரத்தியது. இதில் பாதிக்கப்பட்டவா்கள் 108 அவசரகால ஊா்தி மூலம் ஆரணி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனா். மேலும், சிலா் தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.
மேலும், வழிபாடு செய்தவா்கள் பொங்கல் வைத்ததால், ஏற்பட்ட புகை மூட்டத்தில் தேனீக்கள் கலைந்திருக்கலாம் அல்லது யாராவது தேனிக் கூட்டை கலைத்து இருக்கலாம் எனக் கூறப்படுகிறது.
இதுகுறித்து ஆரணி தீயணைப்பு நிலைய அலுவலா் ஏழுமலை தலைமையிலான தீயணைப்பு வீரா்கள் வந்து தேனீக்களை கலைத்து துரத்தி விட்டனா்.