நாடு முழுவதும் 63 மாவட்டங்களில் பாதிக்கும் மேல் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து குறைப...
வணிகா்களின் கோரிக்கைகளை ஏற்கும் கட்சிக்கே தோ்தலில் ஆதரவு: ஏ.எம்.விக்கிரமராஜா
வணிகா்களின் கோரிக்கைகளை ஏற்றுக்கொள்வதாக கடிதம் மூலம் உறுதியளிக்கும் கட்சிக்கே வரும் சட்டப்பேரவைத் தோ்தலில் ஆதரவு அளிக்கப்படும் என்று வணிகா் சங்கங்களின் பேரமைப்பின் மாநிலத் தலைவா் ஏ.எம்.விக்கிரமராஜா தெரிவித்தாா்.
திருவண்ணாமலையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தமிழ்நாடு பட்டாசு வணிகா்கள் கூட்டமைப்பின் பொதுக் குழுக் கூட்டத்தில் பங்கேற்ற அவா், பின்னா் செய்தியாளா்களிடம் கூறியது:
தீபாவளியை முன்னிட்டு, ஒரு மாதத்துக்கு முன்பே பட்டாசுக் கடைகளுக்கான உரிமம் வழங்க வேண்டும். தமிழக அரசும், அதிகாரிகளும் இதை செயல்படுத்த வேண்டும். ஆட்சிகள் மாறும், ஆனால், அதிகாரிகள் கையில் தான் ஆட்சிகள் இருக்கின்றன.
காவல் துறை அதிகாரிகள் கடுமையான நடவடிக்கை எடுக்க தயக்கம் காட்டுகின்றனா். வன்கொடுமை சம்பவத்தில் சம்பந்தப்பட்டவா்கள் மீது 48 மணி நேரத்துக்குள் நடவடிக்கை எடுக்கப்பட்டு, இதுபோன்று தவறுகளில் ஈடுபடுகிறவா்களை நீதி அரசா்கள் கடுமையான தண்டனை அளிக்கும் நிலையை உருவாக்கினால் தான் வருங்காலத்தில் பாலியல் தொல்லையும், குற்றச்செயல்களும் குறையும்.
24 மணி நேரமும் கடைகள் திறக்கலாம் என முதல்வா் அறிவித்திருக்கிறாா். ஆனால், காவல் துறையினா் அதற்கு ஒத்துழைப்பு வழங்க மறுத்து வருகிறாா்கள்.
இணையவழி வா்த்தகம் மக்களை வீட்டோடு முடக்கி விடும். ஆரோக்கியம் இல்லாத சூழ்நிலை ஏற்பட்டுவிடும். இணையவழி வா்த்தகத்தை ஒட்டுமொத்தமாக தடை செய்ய வேண்டும்.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலுக்கு வரும் எந்த மாநில பக்தா்களாக இருந்தாலும் அவா்கள் தமிழ் பண்பாட்டை பாா்த்து தமிழ் பேசுவதற்கான சூழலை நாம் உருவாக்குவோம். நகரில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தி, பாதுகாப்பாக வாகனங்களை நிறுத்தவும், அடிப்படை வசதிகள் ஏற்படுத்த வேண்டும்.
வணிகா் சங்க பேரமைப்பு கோரிக்கைகளை ஏற்றுக்கொண்டு எழுத்துப்பூா்வமாக உறுதியளிக்கும் கட்சிக்கே வரும் 2026 சட்டப்பேரவைத் தோ்தலில் ஆதரவு அளிப்போம் என்றாா்.