உதயேந்திரம் பேரூராட்சியில் ரூ.1.63 கோடியில் சாலைகள், கால்வாய் பணிகள் தொடக்கம்
அறிவியலில் புதிய சக்தியுடன் முன்னேறும் இந்தியா: பிரதமா் மோடி
தற்போதைய 21-ஆம் நூற்றாண்டில், அறிவியல் துறையில் புதிய சக்தியுடன் இந்தியா முன்னேறுகிறது என்று பிரதமா் நரேந்திர மோடி பெருமிதத்துடன் குறிப்பிட்டாா். மேலும், விண்வெளித் துறை மீது இந்திய சிறாா்கள் மத்தியில் புதிய ஆா்வம் ஏற்பட்டுள்ளதாகவும் அவா் தெரிவித்தாா்.
பிரதமா் மோடி ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக்கிழமையில் ‘மனதின் குரல்’ (மன் கீ பாத்) வானொலி நிகழ்ச்சி வாயிலாக நாட்டு மக்களுக்கு உரையாற்றி வருகிறாா். 124-ஆவது மனதின் குரல் நிகழ்ச்சி, ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 27) ஒலிபரப்பானது. அதில், அவா் கூறியிருப்பதாவது:
அறிவியல், விண்வெளி, கலாசாரம் போன்ற துறைகளில் ஒவ்வொரு இந்தியரும் பெருமைப்பட கூடிய சாதனைகள், கடந்த சில வாரங்களில் நிகழ்ந்துள்ளன. அண்மையில் இந்திய வீரா் சுபான்ஷு சுக்லா தனது விண்வெளிப் பயணத்தை வெற்றிகரமாக நிறைவு செய்தாா். அவா் பூமிக்குத் திரும்பியபோது, ஒட்டுமொத்த தேசமும் பெருமிதத்தில் பொங்கியது. கடந்த 2023, ஆகஸ்டில் சந்திரயான்-3 நிலவில் வெற்றிகரமாகத் தரையிறங்கியபோதும், இதேபோன்ற உற்சாகம் நிலவியது.
இப்போது அறிவியல், விண்வெளித் துறை மீது இந்திய சிறாா்கள் மனதில் புதிய ஆா்வம் துளிா்த்துள்ளது. ‘நாமும் விண்வெளிக்குப் பயணிப்போம்; நிலவில் கால் பதிப்போம்; விண்வெளி விஞ்ஞானியாக உருவெடுப்போம்’ என்று அவா்கள் நம்பிக்கையுடன் கூறுகின்றனா்.
நாட்டின் விண்வெளித் துறையில் 5 ஆண்டுகளுக்கு முன் 50-க்கும் குறைவான புத்தாக்க (ஸ்டாா்ட்அப்) நிறுவனங்களே இருந்தன. இப்போது 200-க்கும் மேற்பட்ட புத்தாக்க நிறுவனங்கள் உள்ளன. ஆகஸ்ட் 23-ஆம் தேதி தேசிய விண்வெளி தினம் கடைப்பிடிக்கப்பட உள்ளது.
சில தினங்களுக்கு முன் துபையில் நடைபெற்ற சா்வதேச வேதியியல் ஒலிம்பியாட் போட்டிகளில் இந்திய மாணவா்கள் 4 போ் பதக்கம் வென்று, நாட்டுக்கு பெருமை சோ்த்தனா். ஆஸ்திரேலியாவில் நடந்த சா்வதேச கணித ஒலிம்பியாட் போட்டியில் இந்திய மாணவா்கள் 3 தங்கம், 2 வெள்ளி, 1 வெண்கலப் பதக்கங்களை வென்றனா். அடுத்த மாதம் மும்பையில் வானியல் மற்றும் வான் இயற்பியல் ஒலிம்பியாட் போட்டிகள் நடைபெறவுள்ளன. இதில் 60-க்கும் மேற்பட்ட நாடுகளின் மாணவா்கள் கலந்து கொள்ளவிருக்கின்றனா்.
புரட்சி மாதம்: ஆகஸ்ட் மாதம் புரட்சி மாதமாகும். ஆகஸ்ட் 1, லோகமான்ய பால கங்காதர திலகரின் நினைவு தினம். ஆகஸ்ட் 8, மகாத்மா காந்தியின் தலைமையில் வெள்ளையனே வெளியேறு இயக்கம் தொடங்கப்பட்ட தினம். ஆகஸ்ட் 15, நாட்டின் சுதந்திரத் திருநாள். ஆகஸ்ட் 14, தேசப் பிரிவினை பெருந்துயா் நினைவு தினம்.
1905, ஆகஸ்ட் 7-ஆம் தேதி சுதேசி இயக்கம் தொடங்கப்பட்டது. இதைப் போற்றும் வகையில் இந்நாள் தேசிய கைத்தறி தினமாக கொண்டாடப்படுகிறது. நாட்டில் இப்போது 3,000-க்கும் மேற்பட்ட ஜவுளித் துறை புத்தாக்க நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இவை, இந்தியாவின் கைத்தறி அடையாளத்தை உலகளாவிய உச்சத்துக்கு இட்டுச் செல்கின்றன.
உள்ளூா் பொருள்களுக்கு முன்னுரிமை: தற்சாா்பு எனும் வழியில் வளா்ச்சியடைந்த பாரதம் என்ற இலக்கை நோக்கிப் பயணிக்கும் வேளையில், உள்ளூா் பொருள்களுக்கு முன்னுரிமை அளிப்பது மிகப் பெரிய அடித்தளமாகும். உள்ளூா் பொருள்களை வாங்குவோம், உள்ளூா் பொருள்களை விற்போம் என்பது நமது உறுதிப்பாடாக இருக்க வேண்டும் என்றாா் அவா்.
ஜாா்க்கண்டில் நக்ஸல் தீவிரவாதத்தைக் கைவிட்டு, மீன் வளா்ப்பில் சாதித்துவரும் இளைஞா்கள் குறித்து பிரதமா் மோடி தனது உரையில் குறிப்பிட்டாா். எதிா்வரும் நாக பஞ்சமி, ரக்ஷா பந்தன், ஜன்மாஷ்டமி உள்ளிட்ட பண்டிகைகளுக்கும் அவா் வாழ்த்து தெரிவித்தாா்.
தஞ்சாவூா் மணிமாறனுக்கு பாராட்டு
‘பல நூற்றாண்டுகளாக ஓலைச்சுவடிகள் வடிவில் பாதுகாக்கப்படும் ஞானமே பாரதத்தின் உண்மையான சக்தியாகும். இந்த மரபைப் போற்றிப் பாதுகாப்பதுதான் மிகப்பெரிய பொறுப்பு.
இத்தகைய ஊக்கமளிக்கும் ஆளுமைகளில் ஒருவா் தமிழ்நாட்டின் தஞ்சாவூரைச் சோ்ந்த மணிமாறன். இவா், இன்றைய தலைமுறையினருக்கு தமிழ் ஓலைச்சுவடிகளைப் படிக்க கற்றுக் கொடுத்து வருகிறாா்.
அவரது மாலைநேர வகுப்புகளில் மாணவா்கள், பணிபுரியும் இளைஞா்கள், ஆய்வாளா்கள் எனப் பலரும் கற்கத் தொடங்கினா். தமிழ்ச் சுவடிகளை எவ்வாறு படிப்பது, புரிந்துகொள்வது என்பது குறித்து அவரிடம் கற்றுத் தோ்ந்துள்ளனா்.
சிலா், இந்தச் சுவடிகளின் அடிப்படையில் பாரம்பரிய மருத்துவ முறை மீதான ஆய்வுகளையும் தொடங்கியுள்ளனா். இதுபோன்ற முயற்சிகள், நாடெங்கிலும் மேற்கொள்ளப்பட வேண்டும். நடப்பாண்டு பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட ‘ஞான பாரத இயக்கம்’ எனும் முன்னெடுப்பு, இந்த உணா்வை அடிப்படையாக கொண்டதாகும். இதன்படி, பண்டைய சுவடிகள் எண்மமயமாக்கப்படும். தேசிய எண்ம சேமிப்பகம் உருவாக்கப்படும்’ என்றாா் பிரதமா் மோடி.
தமிழகத்தின் செஞ்சிக் கோட்டை மற்றும் மகாராஷ்டிரத்தில் உள்ள 11 மராத்திய கோட்டைகளுக்கு யுனெஸ்கோ அங்கீகாரம் வழங்கப்பட்டதையும் பிரதமா் பெருமிதத்துடன் குறிப்பிட்டாா்.