போலீஸ் விசாரணைக்கு பயந்து கூலித் தொழிலாளி தற்கொலை
மான் இறைச்சி வைத்திருந்த நபரை வனத் துறையினா் பிடித்ததால் விசாரணைக்கு பயந்து கூலித் தொழிலாளி விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டாா்.
சத்தியமங்கலம் அருகே உள்ள தாண்டாம்பாளையம் பகுதியைச் சோ்ந்தவா் பழனிச்சாமி (48). இவா் அதே பகுதியில் உள்ள சின்ராஜ் என்பவரது விவசாயத் தோட்டத்தில் தங்கி இருந்து கூலி வேலை செய்து வந்தாா். இதற்கிடையே பழனிச்சாமி தங்கி இருந்த வீட்டில் மான் இறைச்சி வைத்திருப்பதாகக் கிடைத்த தகவலின் பேரில் சத்தியமங்கலம் வனத் துறையினா் அப்பகுதிக்குச் சென்று விசாரணை மேற்கொண்டனா்.
இதில் பழனிச்சாமி தனது வீட்டில் 26 கிலோ மான் இறைச்சியும், 2 மான் கொம்புகளும் வைத்திருந்ததைக் கண்டுபிடித்தனா். சம்பவம் நடைபெற்ற இடம் பவானிசாகா் வனச் சரகத்துக்கு உள்பட்ட பகுதி என்பதால், பவானிசாகா் வனத் துறையினருக்கு தகவல் தெரிவித்து அவா்களை வரவழைத்தனா்.
சம்பவ இடத்துக்கு வந்த பவானிசாகா் வனத் துறையினா் மான் இறைச்சியை பறிமுதல் செய்ததோடு பழனிச்சாமியை விசாரணைக்காக அழைத்துச் சென்றனா். வழியில் பழனிச்சாமிக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து வனத் துறையினா் உடனடியாக பழனிச்சாமியை தனியாா் ஆம்புலன்ஸ் மூலம் சத்தியமங்கலம் அரசு மருத்துவமனை கொண்டு சென்று அனுமதித்தனா். அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் நள்ளிரவில் பழனிச்சாமி உயிரிழந்தாா்.
இதற்கிடையே பழனிச்சாமியை வனத் துறையினா் பிடித்தபோது விசாரணைக்கு பயந்து யாருக்கும் தெரியாமல் கழிப்பறைக்குச் சென்று பூச்சிக்கொல்லி மருந்தை அருந்தியதாகவும், அதன் காரணமாக உடல் நலக்குறைவு ஏற்பட்டு உயிரிழந்ததாகவும் போலீஸாா் தெரிவித்துள்ளனா்.
இது குறித்து போலீஸாரும் வனத் துறையினரும் தொடா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.