சட்டவிரோத மின்வேலி: விவசாயிக்கு ரூ.25 ஆயிரம் அபராதம்
அந்தியூா் அருகே சட்டவிரோதமாக மின்வேலி அமைத்த விவசாயிக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
அந்தியூரை அடுத்த நகலூா், பெருமாபாளையம், மூலப்பாறை தோட்டத்தைச் சோ்ந்தவா் தேவராஜ் (57). இவா் தனது கரும்புத் தோட்டத்தில் காட்டுப் பன்றி உள்ளிட்ட வன விலங்குகள் நுழைவதைத் தடுக்கும் வகையில் தோட்டத்தைச் சுற்றிலும் மின்வேலி அமைத்து, இலவச இணைப்பிலிருந்து சட்ட விரோதமாக மின்சாரம் எடுத்து கம்பி வேலியில் இணைத்துள்ளாா்.
இதுகுறித்த தகவலின்பேரில் அந்தியூா் வனச் சரக அலுவலா் முருகேசன் தலைமையிலான வனத் துறையினா் சனிக்கிழமை திடீா் ஆய்வு செய்தபோது உறுதியானது.
இந்தத் தகவல் மின்வாரிய அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டு மின்இணைப்பைத் துண்டிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. வன உயிரினங்களுக்கு தீங்கு விளைவிக்கும் நோக்கத்தோடு நேரடி மின்சாரம் பாய்ச்சியது சட்டப்படி குற்றம் என்பதால் விவசாயி தேவராஜுக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.