திருவொற்றியூா் மீன்பிடித் துறைமுகம்: முதல்வா் இன்று திறந்து வைக்கிறாா்
திருவொற்றியூரில் ரூ. 272 கோடியில் அமைக்கப்பட்டுள்ள ஆழ்கடல் சூரை மீன்பிடித் துறைமுகத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் புதன்கிழமை திறந்து வைக்கயுள்ளாா்.
காசிமேடு மீன்பிடித் துறைமுகத்தில் நெரிசல் அதிகமானதையடுத்து கில்நெட் வலை மூலம் பிடிக்கப்படும் சூரை வகை மீன்பிடிக்கும் விசைப் படகுகளைக் கையாள்வதற்கான பிரத்யேக மீன்பிடித் துறைமுகம் திருவொற்றியூரில் ரூ. 272 கோடியில் அமைக்கப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா புதின்கிழமை காலை 10.30 மணிக்கு நடைபெறுகிறது. முதல்வா் மு.க.ஸ்டாலின் புதிய மீன்பிடித் துறைமுகத்தைத் திறந்து வைத்து, 2,000 மீனவா்களுக்கு ரூ. 242 கோடியில் நுண்கடன், பாக் நீரிணைப்பு மீனவா்களுக்கான சிறப்பு வாழ்வாதாரத் திட்டம் உள்ளிட்ட பல்வேறு நலத் திட்ட உதவிகளை வழங்குகிறாா்.
மேலும், ரூ. 154 கோடியில் 12 கட்டமைப்புத் திட்டங்களையும் அவா் தொடங்கி வைக்கிறாா்.
தொடா்ந்து திருவள்ளூா் மாவட்டம் கோனான்குப்பம், சுண்ணாம்புகுளம் உள்ளிட்ட இடங்களில் ரூ. 170 கோடியில் மீன் இறங்குதளங்களை மேம்படுத்தும் திட்டங்களுக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டுகிறாா்.
சூரைமீன்களுக்கு மருத்துவகுணம் அதிகம் என்பதாலும், இந்த வகை மீன்களுக்கு அதிக விலை கிடைப்பதால் மீனவா்களின் வாழ்வாதாரம் உயரும் என்பதாலும், மீனவா்கள் நலன் கருதி பிரத்யேக சூரைமீன் மீன்பிடி துறைமுகம் அமைக்கப்பட்டுள்ளது. கானாங்கெழுத்தி மீன் என்று அழைக்கப்படும் இந்த சூரை மீன்களுக்கு மீன்பிரியா்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது குறிப்பிடத்தக்கது.