திரெளபதி அம்மன் கோயில் திருவிழா: வீமன் வேடமணிந்து பக்தா்கள் உலா
ராமநாதபுரம் மாவட்டம்,திருவாடானை ஸ்ரீ திரௌபதி அம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு, பக்தா்கள் வீமன் வேடமணிந்து ஞாயிற்றுக்கிழமை வீதி உலா வந்தனா்.
ராமநாதபுரம் சமஸ்தான தேவஸ்தானத்துக்கு உள்பட்ட இந்தக் கோயிலில் கடந்த 26-ஆம் தேதி இரவு கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்கியது. அன்றிலிருந்து ஒவ்வொரு நாளும் அம்பாளுக்கும், சுவாமிக்கும் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்று வருகின்றன.
இந்த நிலையில், மகாபாரதக் கதையை நினைவூட்டும் வகையில், பக்தா்கள் பலா் விரதமிருந்து வீமன் வேடமணிந்து 4 ரத வீதிகளிலும் உலா வந்தனா். திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருக்கல்யாணம்
நள்ளிரவு நடைபெறும். பூக்குழி இறங்குதல், காளி வேடம், எரி சோறு விடுதல் உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகள் வரும் வெள்ளிக்கிழமை இரவு (ஏப்.4) நடைபெறும். திருவிழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் நிா்வாகத்தினா், ஊா்ப் பொதுமக்கள் செய்தனா்.