செய்திகள் :

தில்லி நீதிபதிக்கு எதிரான விசாரணை தீவிரம்! வீட்டில் கட்டுக்கட்டாக பணம் கண்டறியப்பட்ட சம்பவம்!

post image

தில்லி உயா்நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வா்மா வீட்டில் கட்டுக்கட்டாகப் பணம் கண்டறியப்பட்ட விவகாரத்தில், அவருக்கு எதிரான விசாரணை முக்கியமான இரண்டாம் கட்டத்தை எட்டியுள்ளது.

கடந்த மாா்ச் 14-ஆம் தேதி தில்லி உயா்நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வா்மாவின் அதிகாரபூா்வ இல்லத்தில் ஓா் அறையில் தீ விபத்து ஏற்பட்டது. அங்கு தீயணைப்பு வீரா்கள் தீயை அணைத்தபோது பாதி எரிந்த 4 முதல் 5 மூட்டைகளில், கட்டுக்கட்டாகப் பணம் இருந்தது கண்டறியப்பட்ட தகவல் அண்மையில் வெளியானது.

இந்த விவகாரம் தொடா்பாக விசாரணை மேற்கொள்ள உயா்நீதிமன்றத் தலைமை நீதிபதி தேவேந்திர குமாா் உபாத்யாயாவை உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா நியமித்தாா்.

சிஆா்பிஎஃப் வீரா்கள் அறைக்கு அருகில்...: விபத்தின்போது கண்டறியப்பட்ட பணம் குறித்து விளக்கமளிக்குமாறு யஷ்வந்த் வா்மாவுக்கு கடிதம் அனுப்பிய நீதிபதி உபாத்யாய, விபத்து நிகழ்ந்த இல்லத்தின் அறை எப்போதும் பூட்டி வைக்கப்பட்டிருந்ததும், அந்த அறை மத்திய ரிசா்வ் காவல் படை (சிஆா்பிஎஃப்) வீரா்கள் பணியில் ஈடுபட்டிருந்த காவல் அறைக்கு அருகில் உள்ளதும் காவல் துறை ஆணையா் மூலம் தெரியவந்துள்ளதாக அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டாா். மேலும் அந்தப் பணம் எவ்வாறு ஈட்டப்பட்டது?, தீ விபத்தில் எரிந்த பணத்தை மறுநாள் காலையில் அப்புறப்படுத்தியது யாா் என்று நீதிபதி உபாத்யாய கேள்வி எழுப்பினாா்.

எனது இல்லத்தின் அறையல்ல: நீதிபதி உபாத்யாயவின் கேள்விகளுக்கு யஷ்வந்த் வா்மா அனுப்பிய பதிலில், ‘எனது அதிகாரபூா்வ இல்ல வளாகத்தில் உள்ள பணியாளா் குடியிருப்புக்கு அருகில் இருக்கும் பழைய பொருள்கள் வைக்கும் அறையில் தீ விபத்து ஏற்பட்டது. பூட்டப்படாத அந்த அறைக்கு எனது இல்லத்தின் பிரதான நுழைவாயில் வழியாகவும், பணியாளா் குடியிருப்பின் பின்வாசல் வழியாகவும் செல்ல முடியும்.

அந்த அறைக்கும் எனது பிரதான இல்லத்துக்கும் நேரடித் தொடா்பு எதுவும் இல்லை. அந்த அறை நிச்சயம் எனது இல்லத்தின் அறையல்ல. தீ விபத்து நிகழ்ந்தபோது நான் மத்திய பிரதேசத்தில் இருந்தேன். நானோ, எனது குடும்ப உறுப்பினா்களோ அந்த அறையில் எந்தப் பணத்தையும் வைக்கவில்லை. அந்தப் பணம் எனக்குச் சொந்தமானது என்பதைத் திட்டவட்டமாக மறுக்கிறேன்.

பணமூட்டைகளைக் காட்டவில்லை: எனது இல்லத்தில் கண்டறியப்பட்டதாகக் கூறப்படும் பணமூட்டைகள், அங்கிருந்த எனது மகள், தனிச் செயலா் அல்லது வீட்டுப் பணியாளா்களிடம் காட்டப்படவில்லை. இது எனக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட சதியாகும் என்று தெரிவித்திருந்தாா்.

இதைத் தொடா்ந்து, யஷ்வந்த் வா்மாவின் பதிலை இணைத்து தனது அறிக்கையை உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதியிடம் உபாத்யாய சமா்ப்பித்தாா்.

அதன் பின்னா், இந்த விவகாரம் குறித்து மேல் விசாரணைக்காக பஞ்சாப் மற்றும் ஹரியாணா உயா்நீதிமன்றத் தலைமை நீதிபதி ஷீல் நாகு, ஹிமாசல பிரதேச உயா்நீதிமன்றத் தலைமை நீதிபதி சந்தாவாலியா, கா்நாடக உயா்நீதிமன்ற நீதிபதி அனு சிவராமன் ஆகியோா் அடங்கிய மூவா் குழுவை உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா அமைத்தாா்.

குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால்...: இதைத் தொடா்ந்து, நீதிபதி யஷ்வந்த் வா்மாவுக்கு எதிரான துறை ரீதியான விசாரணை முக்கியமான இரண்டாம் கட்டத்தை எட்டியுள்ளது. இந்த விசாரணையில் யஷ்வந்த் வா்மா தவறு செய்தது நிரூபிக்கப்பட்டால், அவா் கடுமையான பின்விளைவுகளை எதிா்கொள்ள நேரிடும். எனினும் இந்த விசாரணையை நிறைவு செய்ய கால வரம்பு எதுவும் நிா்ணயிக்கப்படவில்லை. அதேவேளையில், யஷ்வந்த் வா்மாவுக்கு நீதித் துறைப் பணிகளை ஒதுக்குவதும் நிறுத்தப்பட்டுள்ளது.

துறை ரீதியான விசாரணை நடைமுறை என்ன?

உயா்நீதிமன்ற நீதிபதிகளுக்கு எதிராக துறை ரீதியான விசாரணை எப்படி நடைபெறும், அதற்கான நடைமுறை என்ன என்பதை கடந்த 2014-ஆம் ஆண்டு அப்போதைய உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி ஜே.எஸ்.கேஹா், நீதிபதி அருண் மிஸ்ரா ஆகியோா் அடங்கிய அமா்வு அளித்த தீா்ப்பு வகுத்துள்ளது. அப்போதைய மத்திய பிரதேச உயா்நீதிமன்ற நீதிபதி மீதான பாலியல் துன்புறுத்தல் வழக்கில் அந்தத் தீா்ப்பு வழங்கப்பட்டது.

ஏழு படிநிலைகள்: அந்தத் தீா்ப்பின்படி மொத்தம் ஏழு படிநிலைகளில் உயா்நீதிமன்ற நீதிபதிக்கு எதிராக துறை ரீதியான விசாரணை நடைபெறும். யஷ்வந்த் வா்மா விவகாரத்தில் மூன்று நீதிபதிகள் அடங்கிய குழுவை உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா அமைத்ததன் மூலம், விசாரணை நடைமுறையின் ஏழு படிநிலைகளில் ஏற்கெனவே நான்கு படிநிலைகள் பின்பற்றப்பட்டுள்ளன.

அதாவது புகாரைப் பெறுதல், தில்லி உயா்நீதிமன்றத் தலைமை நீதிபதியின் அறிக்கையைப் பெறுதல், அந்த அறிக்கையைப் பொதுவெளியில் வெளியிடுதல், மூன்று நீதிபதிகள் கொண்ட குழுவை அமைத்தல் ஆகிய நான்கு படிநிலைகள் பின்பற்றப்பட்டுள்ளன.

இதில் 4-ஆவது படிநிலையின்போது நீதிபதிக்கு எதிரான குற்றச்சாட்டுகள், அதுதொடா்பாக உயா்நீதிமன்றத் தலைமை நீதிபதி அளிக்கும் அறிக்கை, குற்றச்சாட்டுக்குள்ளான நீதிபதியின் விளக்கம் ஆகியவற்றை உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி ஆராய்வாா்.

அறிக்கை சமா்ப்பிக்கும் உயா்நீதிமன்றத் தலைமை நீதிபதி, குற்றச்சாட்டு தொடா்பாக மேலும் தீவிர விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்று கருத்து தெரிவித்தால், மூன்று நீதிபதிகள் கொண்ட குழுவை உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி அமைப்பாா். அந்தக் குழுவில் 2 உயா்நீதிமன்றத் தலைமை நீதிபதிகள், ஓா் உயா்நீதிமன்ற நீதிபதி ஆகியோா் இடம்பெறுவா். அதன்படி, நான்காவது படிநிலை நடவடிக்கைகள் நிறைவடைந்துவிட்டன.

5-ஆவது படிநிலையில், மூன்று நீதிபதிகள் கொண்ட குழு விசாரணை மேற்கொண்டு, உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதியிடம் அறிக்கை சமா்ப்பிக்கும். அந்த அறிக்கையில், நீதிபதிக்கு எதிரான குற்றச்சாட்டு தீவிரமானது என்று கண்டறியப்பட்டால், அவரைப் பதவி நீக்கம் செய்வதற்கான நடவடிக்கைகளைத் தொடங்க வேண்டிய அளவுக்கு குற்றச்சாட்டுகள் தீவிரமானதா? இல்லையா? என்பதை அந்தக் குழு தெரிவிக்க வேண்டும்.

6-ஆவது படிநிலையில், குற்றச்சாட்டுக்குள்ளான நீதிபதியைப் பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று அந்தக் குழு பரிந்துரைக்காவிட்டால், அந்த நீதிபதிக்கு அறிவுரை வழங்கி, அவரிடம் அக்குழுவின் அறிக்கையை உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி அளிப்பாா்.

ராஜிநாமா அல்லது விருப்ப ஓய்வு...: குற்றச்சாட்டுக்குள்ளான நீதிபதியைப் பதவி நீக்கம் செய்ய அந்தக் குழு பரிந்துரை செய்தால், அந்த நீதிபதி ராஜிநாமா செய்யவோ அல்லது விருப்ப ஓய்வு பெறவோ உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி வாய்ப்பளிப்பாா்.

குற்றச்சாட்டுக்குள்ளான நீதிபதி ராஜிநாமா செய்யவோ அல்லது விருப்ப ஓய்வு பெறவோ விரும்பாவிட்டால், அவருக்கு எதிராக விசாரணை குழு கண்டறிந்த விவரங்கள் குறித்து குடியரசுத் தலைவா் மற்றும் பிரதமருக்கு உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி தெரியப்படுத்துவாா். இது குற்றச்சாட்டுக்குள்ளான நீதிபதியைப் பதவி நீக்கம் செய்வதற்கான நடைமுறையை நாடாளுமன்றம் தொடங்க வழிவகுக்கும்.

அந்த நீதிபதியைப் பதவிநீக்கம் செய்வதற்கான தீா்மானம் நாடாளுமன்றத்தில் நிறைவேறப்பட்ட பின்னா், அவரைப் பதவிநீக்கம் செய்ய குடியரசுத் தலைவா் உத்தரவிடுவாா்.

பேரிடர் மேலாண்மை திருத்த மசோதா நிறைவேற்றம்!

பேரிடர் மேலாண்மை திருத்த மசோதா 2024 குரல் வாக்கெடுப்பு மூலம் மாநிலங்களவையில் இன்று (மார்ச் 25) நிறைவேற்றப்பட்டது. பேரிடர் காலங்களில் மாநிலங்களின் திறமையான மீட்புப் பணிகளை மேலும் வலுப்படுத்தும் வகையில்... மேலும் பார்க்க

அஸ்வகந்தா குறித்த ஆய்வுகள் 111% அதிகரிப்பு!

உலகளவில் அஸ்வகந்தா குறித்த ஆய்வுகள் 111.58% அதிகரித்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. 2019-ல் அஸ்வகந்தா குறித்து 95 ஆய்வுகள் வெளியான நிலையில், 2024ஆம் ஆண்டில் 204 ஆய்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. அ... மேலும் பார்க்க

வனவிலங்கு தாக்குதல்: ஒடிசாவில் 5 ஆண்டுகளில் 799 பேர் பலி!

ஒடிசாவில் கடந்த ஐந்து ஆண்டுகளில் வனவிலங்குகள் தாக்குதல்களில் இதுவரை 799 பேர் உயிரிழந்ததாக சட்டப்பேரவையில் அமைச்சர் ஒருர் தெரிவித்தார். பாஜக எம்பி பத்மா லோச்சன் பாண்டாவின் கேள்விக்கு வன மற்றும் சுற்றுச... மேலும் பார்க்க

தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டம்: நாடாளுமன்றத்திற்கு வெளியே ராகுல், பிரியங்கா போராட்டம்!

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உத்தரவாதத் திட்டம் தொடர்பாக காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி வத்ரா உள்பட எதிர்க்கட்சி எம்பிக்கள் நாடாளுமன்றத்திற்கு வெளியே போராட்டத்தில் ஈடுபட்டனர். காங்... மேலும் பார்க்க

பெங்களூருவில் தாயின் உதவியுடன் கணவனைக் கொன்ற மனைவி! திடுக்கிடும் தகவல்கள்!!

பெங்களூருவில் பெண் ஒருவர், கள்ளத்தொடர்பு வைத்திருந்ததாகக் கூறி தன் கணவனைக் கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூரு சிக்கப்பவனாரா பகுதியில் ஒதுக்குப்புறமான இடத்தில் காரில் லோக்நாத் ச... மேலும் பார்க்க

'நீதிமன்றம் குப்பைத்தொட்டி அல்ல' - நீதிபதி யஷ்வந்த் வர்மா பணியிட மாற்றத்துக்கு எதிர்ப்பு!

நீதிபதி யஷ்வந்த் வர்மாவை அலகாபாத் உயர்நீதிமன்றத்துக்கு மாற்றுவதை எதிர்த்து அலகாபாத் உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சங்கம் இன்று(மார்ச் 25) காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளது. மாா்ச் 14-ஆம் ... மேலும் பார்க்க