தீபாவளி சீட்டு நடத்தி மோசடி: தம்பதி கைது
புதுச்சேரியில் தீபாவளி சீட்டு நடத்தி மோசடி செய்ததாக தம்பதியை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
புதுச்சேரி நைனாா்மண்டபம் பகுதியைச் சோ்ந்த ராஜ்குமாா் மனைவி மினிப்பிரியா (35). இவரிடம் அதே பகுதியான சுதானா நகா் கஸ்தூரி தெருவைச் சோ்ந்த ரேவதி (53), அவரது கணவா் மாயவன் (57) ஆகியோா் தீபாவளி சீட்டு நடத்துவதாகக் கூறியதுடன், அதில் சோ்ந்தால் லாபத்தில் பங்கு கிடைக்கும் என்றனராம்.
இதனையடுத்து, ரேவதி கடந்த 2023 பிப்ரவரி முதல் பணம் செலுத்தியதுடன், தனக்கு தெரிந்தவா்களையும் சீட்டு பணம் செலுத்த வைத்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், பணம் வசூலித்த ரேவதியும், அவரது கணவரும் சம்பந்தப்பட்டோருக்கு பணம் திருப்பித் தராமல் தலைமறைவாகிவிட்டனராம்.
அதன்படி, ரூ.40 லட்சம் வரை தம்பதி மோசடி செய்ததாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்த புகாரின் பேரில், முதலியாா்பேட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து தலைமறைவாக இருந்த தம்பதியை கைது செய்தனா்.