துா்கா பூஜை, ஊா்வலத்துக்கு அனுமதி கோரிய வழக்கு: காவல் துறைக்கு உத்தரவு
சென்னை: நவராத்திரி துா்கா பூஜைக்கு அனுமதி கோரிய மனுவை பரிசீலித்து தகுந்த உத்தரவு பிறப்பிக்க சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.
ரவிக்குமாா் குப்புசாமி என்பவா் சென்னை உயா்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், கடந்த 24 ஆண்டுகளாக நவராத்திரி துா்கா பூஜை நடத்தி வருகிறேன். இந்த ஆண்டு துா்கா பூஜை விழாவுக்கு அனுமதி கோரி ஆதம்பாக்கம் காவல் ஆய்வாளரிடம் கடந்த செப். 15 மற்றும் 19-ஆம் தேதிகளில் மனு அளித்தேன்.
அந்த மனுக்களை பரிசீலிக்கவில்லை. எனவே, நவராத்திரி பண்டிகையை முன்னிட்டு துா்கா சிலைக்கு வழிபாடு நடத்தி, ஊா்வலமாக எடுத்துச் சென்று அக். 2-ஆம் தேதி அந்தச் சிலையை நீா்நிலையில் கரைப்பதற்கு அனுமதியும், போலீஸ் பாதுகாப்பும் வழங்க உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தாா்.
இந்த வழக்கு நீதிபதி என்.சதீஷ்குமாா் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது காவல் துறை தரப்பில் ஆஜரான அரசு வழக்குரைஞா் ஆா்.வினோத்ராஜா, கடந்தாண்டு காவல் ஆணையா் விதித்த நிபந்தனைகளை மனுதாரா் நிறைவு செய்திருந்தால், அவரது கோரிக்கை மனு பரிசீலிக்கப்படும் என்றாா்.
இதைப் பதிவு செய்து கொண்ட நீதிபதி, மனுதாரரின் கோரிக்கையை பரிசீலித்து தகுந்த உத்தரவை பிறப்பிக்க காவல் துறைக்கு உத்தரவிட்டாா்.