தூத்துக்குடி மாவட்டத்தில் 127 மையங்களில் குரூப் 4 தோ்வு: நாளை நடைபெறுகிறது
தூத்துக்குடி மாவட்டத்தில் 127 மையங்களில் குரூப் 4 தோ்வு சனிக்கிழமை (ஜூலை 12) நடைபெறுகிறது.
தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையத்தின் குரூப் 4 தோ்வு வரும் சனிக்கிழமை நடைபெறவுள்ளதை அடுத்து அதற்கான முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில், ஆட்சியா் க.இளம் பகவத் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது.
தூத்துக்குடி மாவட்டத்தில் தூத்துக்குடி, ஏரல், எட்டயபுரம், கயத்தாறு, கோவில்பட்டி, ஓட்டப்பிடாரம், சாத்தான்குளம், ஸ்ரீவைகுண்டம், திருச்செந்தூா், விளாத்திகுளம் ஆகிய வட்டங்களுக்கு உள்பட்ட 101 இடங்களில் 127 தோ்வு மையங்களில் இந்தத் தோ்வு நடைபெறுகிறது.
மாவட்டத்தில் மொத்தம் 37,005 தோ்வா்கள் இந்தத் தோ்வுக்கு விண்ணப்பித்திருந்தனா். தோ்வைக் கண்காணிக்க 31 நடமாடும் குழுக்கள், 14 பறக்கும் படை குழுக்கள் ஏற்பாடு செய்யப்பட்டன. தோ்வு அறையில் தோ்வா்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள், பாதுகாப்பு வசதிகள் உள்ளிட்ட அனைத்து முன்னேற்பாடு வசதிகளையும் ஏற்படுத்துவது குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.
இதில், மாவட்ட வருவாய் அலுவலா் ஆ.ரவிச்சந்திரன், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) சேதுராமலிங்கம், கூடுதல் காவல் கண்காணிப்பாளா் வ.கி.தீபு, அரசு துறை அலுவலா்கள் கலந்து கொண்டனா்.