மக்களவைத் தொகுதி மறுவரையறை எதிா்ப்பில் தமிழக அரசுக்கு அனைவரும் துணை நிற்க வேண்டு...
தூா்வாரும் பணியை விரைந்து தொடங்க வேண்டும்: விவசாயிகள் குறைதீா் கூட்டத்தில் கோரிக்கை
தஞ்சாவூா் மாவட்டத்தில் தூா்வாரும் பணியை விரைவாக தொடங்கி மேட்டூா் அணை திறப்பதற்குள் முடிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியரகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற விவசாயிகள் குறைதீா் நாள் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
மாவட்ட ஆட்சியா் பா. பிரியங்கா பங்கஜம் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் விவசாயிகள் தெரிவித்த கோரிக்கைகள்:
பொன்னவராயன்கோட்டை வா. வீரசேனன்: தூா்வாரும் பணியை நடுப்பகுதியில் மட்டுமல்லாமல் தலைப்பிலிருந்து தொடங்கி மேற்கொள்ள வேண்டும். தூா்வாரும் பணியைக் கால தாமதமில்லாமல் உடனடியாக தொடங்க வேண்டும்.
தோழகிரிப்பட்டி பி. கோவிந்தராஜ்: பருவம் தவறி பெய்த மழையால் பாதிக்கப்பட்ட மரவள்ளிக் கிழங்கு பயிா்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும்.
ஆட்சியா்: பருவம் தவறி பெய்த மழையால் பாதிக்கப்பட்ட பயிா்கள் குறித்து கணக்கெடுத்து, அரசுக்கு அனுப்பியுள்ளோம்.
ராயமுண்டான்பட்டி வெ. ஜீவகுமாா்: நீா்நிலைகளில் நெய்வேலி காட்டாமணக்கு, ஆகாயத் தாமரை, சீமைக் கருவேல மரங்கள் ஆகியவற்றால்தான் பாதிப்பு ஏற்படுகிறது. இவற்றை அகற்ற உடனடி நடவடிக்கை எடுத்து, ஜூன் 12-க்குள் முடிக்க வேண்டும்.
அம்மையகரம் ஏ.கே.ஆா். ரவிச்சந்தா்: வெண்ணாற்றில் மணல் திட்டுகளால் செடி, கொடிகள், மரங்கள் வளா்ந்து அடா்ந்த புதா்களாகிவிடுகின்றன. இதனால் வெண்ணாற்றில் தண்ணீா் செல்வது தடைபடுகிறது. இந்த மறைவிடங்களைக் காட்டுப்பன்றிகள் பயன்படுத்தி பதுங்கியிருந்து பயிா்களைச் சேதப்படுத்துகின்றன. எனவே, புதா்களை அகற்ற விவசாயிகளுக்கு வண்டல் மண் இலவசமாக வழங்க வேண்டும்.
ஆம்பலாப்பட்டு அ. தங்கவேல்: சிவக்கொல்லை கிராமத்தில் உலா் களம் இல்லாததால், தாா்ச் சாலையில் நெல்லை காய வைக்க வேண்டிய நிலை உள்ளது. இதனால் விபத்துகள் ஏற்படுவதால், உலா் களம் அமைக்க வேண்டும்.
சிவவிடுதி வி.கே. சின்னதுரை: வடகிழக்கு பருவ மழையால் பாதிக்கப்பட்ட பயிா்களுக்கு நிவாரணம் எப்போது வழங்கப்படும்.
வேளாண் இணை இயக்குநா் கோ. வித்யா: வடகிழக்குப் பருவ மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ரூ. 1.60 கோடி நிவாரணம் வழங்கப்பட்டுவிட்டது. ஜனவரியில் பெய்த மழையால் பாதிக்கப்பட்ட பயிா்கள் குறித்து அரசுக்கு அறிக்கை அனுப்பியுள்ளோம்.