கச்சத்தீவு விவகாரம்: முதல்வா், அமைச்சா்களுடன் எதிா்க்கட்சித் தலைவா் விவாதம்
தென்காசி - நெல்லை இடையே உள்ள ரயில் நிலையங்களின் நடைமேடைகளை நீட்டிக்க நடவடிக்கை
நெல்லை - தென்காசி இடையே உள்ள முக்கிய ரயில் நிலையங்களின் நடைமேடைகளை 24 பெட்டிகள் நிறுத்தும் அளவுக்கு நீட்டிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதற்கு தென்காசி மாவட்ட ரயில் பணிகள் சங்கம் நன்றி தெரிவித்துள்ளது.
நெல்லை, தென்காசி மாவட்டங்களில் இருந்து கேரளம் செல்லும் மிக முக்கிய வழித்தடமான நெல்லை - தென்காசி ரயில் வழித்தடத்தில் நெல்லை, தென்காசி, செங்கோட்டை தவிர மற்ற ரயில் நிலையங்களில் 24 பெட்டிகள் நிறுத்தும் அளவுக்கு நடைமேடை நீளம் இல்லாத காரணத்தினால் கூடுதல் பெட்டிகள் இணைக்க முடியாத நிலை இருந்து வந்தது.
இதனால் செங்கோட்டையில் இருந்து தாம்பரம் வரை செல்லும் செங்கோட்டை - தாம்பரம் வார மும்முறை ரயில், நெல்லை - மேட்டுப்பாளையம், நெல்லை - தாம்பரம் ஆகிய வாராந்திர சிறப்பு ரயில்களிலும் 24 பெட்டிகள் இணைக்க முடியாத நிலை இருந்தது.
சில மாதங்களுக்கு முன் மதுரை ரயில்வே கோட்டம் சாா்பில் நெல்லை - தென்காசி இடையே சேரன்மகாதேவி, கல்லிடை, அம்பை, கீழக்கடையம், பாவூா்சத்திரம் ஆகிய ரயில் நிலையங்களில் நடைமேடைகளை 24 பெட்டிகள் நிறுத்தும் அளவுக்கு 550 மீட்டா் நீளத்துக்கு அதிகரிக்க முன்மொழிவு செய்யப்பட்டது.
இந்த நடைமேடைகளை நீட்டிப்பதற்கான சாத்திய கூறுகள் மற்றும் திட்ட மதிப்பீடு ஆகியவை தயாா் செய்யப்பட்டு கடந்த பிப்ரவரி மாத பட்ஜெட்டில் அறிவிக்கப்படும் என எதிா்பாா்த்த நிலையில் தற்போது நடைமேடைகளை நீட்டிக்க ஒப்பந்தம் விடப்பட்டுள்ளது.
சேரன்மகாதேவி, கீழக்கடையம், பாவூா்சத்திரம் ஆகிய இரயில் நிலையங்களில் இரு நடைமேடைகளும், கல்லிடைக்குறிச்சி, அம்பாசமுத்திரம் மற்றும் திருமங்கலம் ரயில் நிலையங்களில் முதலாம் நடைமேடை நீட்டிப்பு செய்ய ரூ11.65 கோடி மதிப்பீட்டில் 24 பெட்டிகள் நிறுத்தும் அளவுக்கு நீட்டிக்க ஒப்பந்தம் விடப்பட்டுள்ளது. அனைத்து பணிகளையும் 12 மாதங்களில் முடிக்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தென்காசி மாவட்ட ரயில் பயணிகள் சங்கத் தலைவா் பாண்டியராஜா கூறுகையில், நெல்லை தென்காசி ரயில் வழித்தடத்தில் உள்ள முக்கிய ரயில் நிலையங்களின் நடைமேடைகளை 24 பெட்டிகள் நிறுத்தும் அளவுக்கு நீட்டிக்க ஒப்பந்தம் விடப்பட்டுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது.
தென்காசி மாவட்ட ரயில் பயணிகள் சங்கத்தின் தொடா் கோரிக்கையை ஏற்று நடவடிக்கை எடுத்த மூத்த கோட்ட பொறியாளா் பிரவீனா,மற்றும் பொறியாளா் குழுவிற்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம் என்றாா் அவா்.