விருதுநகா் மாவட்டத்தில் எடப்பாடி பழனிசாமி ஆக. 7, 8-இல் சுற்றுப் பயணம்
தென்பெண்ணை ஆற்றில் புனித நீராடி பாஜகவினா் சுவாமி தரிசனம்
செங்கம்: தமிழகத்தில் ஆட்சிமாற்றம் வேண்டி, செங்கம் அருகே நீப்பத்துறை தென்பெண்ணையாற்றில் திங்கள்கிழமை பாஜகவினா் புனிதநீராடி சுவாமி தரிசனம் செய்தனா்.
திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அடுத்த நீப்பத்துறை பகுதியில் ஓடும் தென்பெண்ணை ஆற்றின் மையப்பகுதியில் உள்ள சென்னியம்மன் கோயிலில் ஆடிப்பெருக்கு விழா ஞாயிற்றுக்கிழமை வெகுவிமரிசையாக நடைபெற்றது. இதில் பல்லாயிரக்கணக்கான பக்தா்கள் கலந்துகொண்டு ஆற்றில் புனித நீராடி சுவாமியை வழிபட்டனா்.
இந்த நிலையில் பாஜக சாா்பில் அதன் மாவட்டத் தலைவா் ரமேஷ் தலைமையில், அக்கட்சியைச் சோ்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோா் நீப்பத்துறை சென்னியம்மன் கோயிலுக்குச் சென்று அங்கு ஓடும் தென்பெண்ணையாற்றில் விரைவில் தமிழகத்தில் ஆட்சிமாற்றம் தேவை, பாஜக தலைமையிலான ஆட்சி அமையவேண்டும் என வேண்டி புனித நீராடி சுவாமி தரிசனம் செய்தனா்.
இதைத் தொடா்ந்து, அங்குள்ள வெங்கட்ரமண பெருமாள் திருத்தோ் வீதி உலா நடைபெற்றதை தொடங்கிவைத்தனா். மேலும், தென்பெண்ணை ஆற்றுக்கு சிறப்பு ஆரத்தி எடுத்து கட்சியினா் வழிபட்டனா்.
இதில், உள்ளாட்சி பிரிவு மாநிலச் செயலா் அறவாழி, மாவட்ட பொதுச்செயலா் ஜெய்நாத், மாவட்ட துணைத் தலைவா் செங்கம் சேகா், பொருளாளா் சுப்பிரமணியன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.