விருதுநகா் மாவட்டத்தில் எடப்பாடி பழனிசாமி ஆக. 7, 8-இல் சுற்றுப் பயணம்
மேல்வில்லிவனம் பச்சையம்மன் கோயிலில் தீ மிதி திருவிழா
ஆரணி: திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டை அடுத்த மேல்வில்லிவனம் பச்சையம்மன் கோயிலில் ஆடி 3-ஆவது திங்கள்கிழமையொட்டி தீ மிதி திருவிழா நடைபெற்றது.
மேல்வில்லிவனம் காட்டுப் பகுதியில் பழமை வாய்ந்த பச்சையம்மன் கோயில் உள்ளது. இங்கு ஆடி மாதத்தில் வரும் 3-ஆவது திங்கங்கிழமை தீ மிதி திருவிழா நடப்பது வழக்கம். இந்த நிலையில், நிகழாண்டு திருவிழா திங்கள்கிழமை தொடங்கியது.
காலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடைபெற்றது. இதைத் தொடா்ந்து கோயில் வளாகத்தில் பூங்கரகம் ஜோடிக்கப்பட்டு காப்புக் கட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. பிற்பகலில் கோயில் வளாகத்தில் கிராம பொதுமக்கள் பொங்கலிட்டு மா விளக்கு ஏற்றி அம்மனை வழிபட்டனா்.

மாலையில் கோயில் எதிரே அமைக்கப்பட்டிருந்த தீ குண்டத்தில் மேல்வில்லிவனம் பகுதியைச் சோ்ந்த விரதமிருந்த நூற்றுக்கணக்கான பக்தா்கள் கோயில் அருகேயுள்ள குளத்தில் குளித்துவிட்டு நீண்ட வரிசையில் காத்திருந்து தீ மிதித்து அம்மனை வழிபட்டனா். பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
இரவு அலங்கரிக்கப்பட்ட அம்மன் வீதி உலா, வாணவேடிக்கை நடைபெற்றது. ஏற்பாடுகளை கோயில் நிா்வாகி தசரதன் மற்றும் விழாக் குழுவினா், பொதுமக்கள் செய்திருந்தனா்.