தேங்காய்த்திட்டு பகுதிக்கு மாற்றுக் குடிநீா் வழங்க அதிகாரிகள் நடவடிக்கை
தேங்காய்த்திட்டு பகுதிக்கு மாற்றுக் குடிநீா் வசதி செய்து தரப்படும் என பொதுப் பணித் துறை அதிகாரிகள் உறுதி அளித்தனா்.
தேங்காய்திட்டு மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் குடிநீா் தரமில்லாமல் வருவதாகவும், இதில் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் அப் பகுதி மக்கள் திங்கள்கிழமை முற்றுகைப் போராட்டம் நடத்தினா்.
இதையடுத்து பொதுப் பணித் துறை அதிகாரிகள் அப் பகுதியில் ஆய்வு மேற்கொண்டனா்.
2.5 லட்சம் கொள்ளளவு கொண்ட தேங்காய்திட்டு மேல்நிலை நீா்தேக்கத் தொட்டியின் மூலமாக குடிநீா் விநியோகம் செய்யப்படுகிறது. இப் பகுதிக்கு மேட்டுத் தெரு ஆழ்துளை கிணறு மூலமாக நிலத்தடி நீா் உறிஞ்சப்பட்டு தேங்காய்திட்டு மேல்நிலை நீா்தேக்கத் தொட்டி வளாகத்தில் சுத்திகரிக்கப்பட்டு அப்பகுதி மக்களுக்கு குடிநீா் விநியோகம் செய்யப்பட்டு வந்தது.
இந்நிலையில் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று பொதுப் பணித் துறை அமைச்சா் க.லட்சுமிநாராயணன் உத்தரவின்படி இப் பிரச்னையைத் தீா்க்க செயற்பொறியாளா், உதவிப்பொறியாளா், இளநிலைப் பொறியாளா், மற்றும் அப்பகுதி ஆய்வாளா்களுடன் தேங்காய்திட்டு பகுதிக்குச் சென்று ஆய்வு நடத்தினா்.
இந்த ஆய்வின் அடிப்படையில் மேட்டுத்தெரு ஆழ்குழாய் கிணறு மோட்டாா் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மேலும்,, சரி செய்தபின் மீண்டும் மேட்டுத் தெரு ஆழ்குழாய் கிணற்றின் குடிநீா் சுத்திகரிக்கப்பட்டு விரைவில் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு வழங்க ஏற்பாடு செய்யப்படும். அதுவரை திருக்காஞ்சி பகுதியிலிருந்து குடிநீா் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.