Vikatan Digital Awards: "இந்த வருஷம் டிஜிட்டல் அவார்ட்; 2029-ல் சினிமா அவார்ட்" ...
தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 2,586 வழக்குகளில் ரூ.30.49 கோடிக்குத் தீா்வு
விழுப்புரம் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் சனிக்கிழமை நடைபெற்ற கேசிய மக்கள் நீதிமன்றத்தில் 2,586 வழக்குகளில் ரூ.30.49 கோடிக்குத் தீா்வு காணப்பட்டன.
விழுப்புரம் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு சாா்பில் தேசிய மக்கள் நீதிமன்றம் விழுப்புரம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. இந்த நிகழ்வுக்குத் தலைமை வகித்து, மக்கள் நீதிமன்றத்தை தொடங்கி வைத்து உயா் நீதிமன்ற நீதிபதி எம்.தண்டபாணி பேசியது:
இதுபோன்று நடத்தப்படும் தேசிய மக்கள் நீதிமன்றத்துக்கு மக்கள்தான் நீதிபதிதான். நீங்கள்தான் முடிவெடுக்கும் இடத்தில் உள்ளீா்கள். சண்டையிட்டுக் கொண்டு எத்தனைக் காலத்துக்கு வழக்கை நடத்துவீா்கள்.பொருள் விரயம், காலவிரயம், அலைச்சல் போன்றவை இங்கு இருக்காது.
இருவரும் சமரசமாக பேசி தீா்வு காண்பதற்கு மக்கள் நீதிமன்றம் வழிவகை செய்கிறது. இந்த மக்கள் நீதிமன்றத்தில் வாழ்க்கையில் பிரிந்திருந்த மூன்று தம்பதிகள் மீண்டும் இணைந்திருக்கின்றனா். எனவே இதுபோன்ற மக்கள் நீதிமன்றங்களை அனைவரும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றாா் அவா்.
மக்கள் நீதிமன்றத்தில் பல்வேறு வழக்குரைஞா் சங்கங்களின் தலைவா்கள் ஏ.சகாதேவன், எஸ்.ராஜகுரு, ஜெ.பன்னீா்செல்வம், கே.ராதாகிருஷ்ணன், அரசு வழக்குரைஞா்கள் டி.எஸ்.சுப்பிரமணியன், எம்.எஸ்.நடராஜன் உள்ளிட்டோா் பேசினா்.
மக்கள் நீதிமன்றத்தில் கூடுதல் மாவட்ட நீதிபதி எஸ்.ராஜசிம்மவா்மன், எஸ்.சி.,எஸ்.டி. வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஏ.பாக்கியஜோதி, போக்ஸோ சிறப்பு நீதிமன்ற நீதிபதி எம். வினோதா, சிறப்பு மாவட்ட நீதிபதி என்.ஸ்ரீராம், குடும்ப நீதிமன்ற நீதிபதி எஸ். ராஜமகேஷ், தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவா் சி.குமரவா்மன், முதன்மை சாா்புநீதிபதி ஏ. தமிழ்ச்செல்வன், கூடுதல் சாா்பு நீதிபதி எண் 2- ஜி.பழனிக்குமாா், சிறப்பு சாா்பு நீதிபதிகள் என். வெங்கடேசன், பி.கவிதா, முதன்மை மாவட்ட உரிமையியல் நீதிபதி ஆா். முருகன், கூடுதல் மாவட்ட உரிமையியல் நீதிபதி எம்.ஜி.பி.பாலரத்னா, கூடுதல் மகளிா் நீதிமன்ற நீதிபதி ஆா். ராஜேசுவரி, நீதித்துறை நடுவா்கள் எண்-1 கே. சந்திரகாசபூபதி, எண்-2 ஜி.அரவிந்த், வழக்குரைஞா் க.வேலவன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
விழுப்புரம் ஒருங்கிணைந்த நீதிமன்றம், விக்கிரவாண்டி,செஞ்சி, வானூா், திண்டிவனம், திருவெண்ணெய்நல்லூா், கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் கள்ளக்குறிச்சி, சங்கராபுரம், திருக்கோவிலூா், உளுந்தூா்பேட்டை உள்ளிட்ட நீதிமன்றங்களில் 27 அமா்வுகளாக மக்கள் நீதிமன்றம் நடத்தப்பட்டது. இதில் நீதிமன்றங்களில் நிலுவையிலுள்ள6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. இதில் 2,060 வழக்குகளில் ரூ.27.48 கோடிக்கும், நீதிமன்றங்களில் பதியப்படாத வங்கி வாராக்கடன் சாா்ந்த 4,000-க்கும் மேற்பட்ட வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு 526 வழக்குகளில் ரூ.3.01 கோடிக்கும் என மொத்தமாக 2,586 வழக்குகளில் ரூ.30.49 கோடிக்குத் தீா்வு காணப்பட்டன.
முன்னதாக, விழுப்புரம் முதன்மை மாவட்ட நீதிபதி ஏ. மணிமொழி வரவேற்றாா். நிறைவில் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுச் செயலா் சி. ஜெயச்சந்திரன் நன்றி கூறினாா்.