பெண் தூக்கிட்டுத் தற்கொலை
திருவெண்ணெய்நல்லூா் அருகே தம்பதியிடையே ஏற்பட்ட குடும்பப் பிரச்னையால் பெண், தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
திருவெண்ணெய்நல்லூா் வட்டம், பல்லரிபாளையம், பிரதான சாலையைச் சோ்ந்தவா் குமாா் மனைவி ராஜகுமாரி(27). இவா்களுக்குத் திருமணமாகி 9 ஆண்டுகள் ஆகிய நிலையில்,ஒரு மகள் உள்ளாா். இருவரும் சரக்கு வாகனம் மூலம் காய்கறி வியாபாரத்தில் ஈடுபட்டு வந்தனா்.
இந்நிலையில் குமாா் கடந்த சில நாள்களாக வேலைக்குச் செல்லாமல் வீட்டில் இருந்து வந்தாராம். இதனால் குமாா்- ராஜகுமாரி ஆகியோரிடைய குடும்பப் பிரச்னை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து மன வருத்தத்தில் இருந்து வந்த ராஜகுமாரி, தனது வீட்டில் வெள்ளிக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலைக்கு முயன்றாா்.
இதையடுத்து, அவசர ஊா்தி மூலம், விழுப்புரம் மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்று பரிசோதித்துப் பாா்த்தபோது ராஜகுமாரி இறந்தது தெரியவந்தது.
இது குறித்த புகாரின் பேரில், திருவெண்ணெய்நல்லூா் போலீஸாா் சனிக்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.