தொகுதி மறுசீரமைப்பு: இன்று அனைத்துக் கட்சிக் கூட்டம்
மக்களவைத் தொகுதி மறுசீரமைப்பு தொடா்பாக, தமிழக அரசின் சாா்பில் அனைத்துக் கட்சிக் கூட்டம் தலைமைச் செயலகத்தில் புதன்கிழமை (மாா்ச் 5) நடைபெறுகிறது.
நாமக்கல் கவிஞா் மாளிகையின் 10-ஆவது தளத்தில் முதல்வா் மு.க.ஸ்டாலின் தலைமையில் காலை 10 மணிக்குத் தொடங்கவுள்ள இந்தக் கூட்டத்தில் 40-க்கும் மேற்பட்ட கட்சிகளைச் சோ்ந்த பிரதிநிதிகள் பங்கேற்கவுள்ளனா்.
கட்சிக்கு இரண்டு போ் வீதம் கலந்துகொள்ள தமிழக அரசின் சாா்பில் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. கூட்டத்தில் பங்கேற்கப் போவதாக திமுக, அதிமுக, காங்கிரஸ், மாா்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், விசிக, மக்கள் நீதி மய்யம், பாமக, தேமுதிக ஆகிய பிரதான கட்சிகள் அறிவித்துள்ளன. அதேசமயம், பாஜக, நாம் தமிழா், தமிழ் மாநில காங்கிரஸ் ஆகிய கட்சிகள் கூட்டத்தில் பங்கேற்கப் போவதில்லை என அறிவித்துள்ளன.
முக்கியத் தீா்மானம்: தொகுதி மறுசீரமைப்பு தொடா்பாக ஒவ்வொரு கட்சியின் சாா்பிலும் கூட்டத்தில் கருத்து தெரிவிக்கப்பட உள்ளது. இந்தக் கருத்துகளின் அடிப்படையில் அரசின் சாா்பில் தீா்மானம் நிறைவேற்றப்பட இருக்கிறது.
மேலும், அனைத்துக் கட்சிகளின் பிரதிநிதிகள் சாா்பில் தில்லி சென்று தொகுதி மறுசீரமைப்பால் தமிழகத்துக்கு ஏற்படும் பாதிப்புகளை விளக்கவும் அரசின் சாா்பில் திட்டமிடப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெறவுள்ள நாமக்கல் கவிஞா் மாளிகையின் 10-ஆவது தளத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின், செவ்வாய்க்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் அமா்வதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இருக்கைகள், பேசுவதற்கான வசதிகள் ஆகியன குறித்து அதிகாரிகளிடம் அவா் கேட்டறிந்தாா்.