தொடக்க ஆட்டக்காரராக களமிறங்க பாபர் அசாம்தான் சரியான நபர்: முகமது ரிஸ்வான்
சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரில் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்க பாபர் அசாம்தான் சரியான நபர் என பாகிஸ்தான் அணியின் கேப்டன் முகமது ரிஸ்வான் தெரிவித்துள்ளார்.
ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் நாளை (பிப்ரவரி 19) தொடங்குகிறது. தொடரின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியனான பாகிஸ்தான், நியூசிலாந்து அணியை எதிர்கொள்கிறது. இரு அணிகளுக்கும் இடையிலான இந்தப் போட்டி கராச்சியில் நடைபெறுகிறது.
இதையும் படிக்க: எந்த பந்துவீச்சாளருக்கும் சவாலளிக்கக் கூடியவர் விராட் கோலி: பாக். வீரர்
பாபர் அசாம்தான் சரியான நபர்
சாம்பியன்ஸ் டிராபியின் முதல் போட்டியில் நியூசிலாந்துக்கு எதிராக நாளை விளையாடவுள்ள நிலையில், பாகிஸ்தான் அணியில் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்க பாபர் அசாம்தான் சரியான நபர் என அந்த அணியின் கேப்டன் முகமது ரிஸ்வான் தெரிவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.

இது தொடர்பாக அவர் பேசியதாவது: பாகிஸ்தான் ஆடுகளங்களின் தன்மையை ஆராய்ந்து பார்த்து, பாபர் அசாம் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்குவதே அணிக்கான சிறந்த முடிவாக இருக்கும் என நினைத்தோம். பாகிஸ்தான் அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்க வீரர்கள் இல்லாமலில்லை. ஆனால், ஆடுகளங்களின் தன்மையைக் கருத்தில் கொண்டு ஆலோசித்தபோது, தொடக்க ஆட்டக்காரராக களமிறங்க பாபர் அசாம்தான் சரியான தேர்வாக இருப்பார் என்ற முடிவுக்கு வந்தோம். தொடக்க ஆட்டக்காரராக பாபர் அசாம் மிகவும் சிறப்பாக விளையாடக் கூடியவர். எங்கள் அணியின் தொடக்க ஆட்டக்காரர் அவர்தான் என்றார்.
இதையும் படிக்க: ஜஸ்பிரித் பும்ரா இல்லாமல் களமிறங்கும் இந்திய அணி; ஷிகர் தவான் கூறுவதென்ன?
நியூசிலாந்துக்கு எதிராக முதல் போட்டியில் விளையாடும் பாகிஸ்தான் அணி, பிப்ரவரி 23 ஆம் தேதி இந்தியாவுக்கு எதிராக துபையில் நடைபெறும் போட்டியில் விளையாடவுள்ளது குறிப்பிடத்தக்கது.