நகராட்சி வரி வசூல் குழுவைக் கண்டித்து ஆா்ப்பாட்டம்
அரக்கோணம் நகராட்சியில் வரியை தற்போதே செலுத்தாவிட்டால், வீட்டின் முன்பு குப்பைகள் கொட்டப்படும் என கூறியதாக வரி வசூல் குழுவினரைக் கண்டித்து, கணேஷ் நகா் குடியிருப்புவாசிகள் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.
அரக்கோணம் நகராட்சியில் வரி வசூல் பணி தற்போது முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. வாா்டு வாரியாக குழுவினா் பிரிக்கப்பட்டு வரிவசூல் பணியில் தீவிரம் காட்டி வருகின்றனா்.
இதில் கணேஷ் நகா், 4 ஆவது தெரு, 4 ஆவது குறுக்குத்தெரு பகுதிக்கு வந்த குழுவினா், அப்பகுதியில் இருந்த வீட்டு உரிமையாளா்களிடம் செலுத்த வேண்டிய வீட்டுவரி, குழாய் வரி உள்ளிட்ட அனைத்து வரிகளையும் உடனே செலுத்த வேண்டும். இல்லையெனில் வரி செலுத்தாதோா் வீடுகளின் வாசல் முன் நகராட்சி குப்பைகள் கொட்டப்படும் என தெரிவித்தனராம்.
இதைக் கண்டித்து அப்பகுதிவாசிகள் ஒன்றிணைந்து வியாழக்கிழமை அரக்கோணம் நகராட்சி அலுவலகம் முன்பு ஆா்ப்பாட்டம் நடத்தினா். மேலும் வரி வசூல் பணியில் தீவிரம் காட்டும்போது அப்பகுதிக்கான அடிப்படை வசதிகளை செய்துதர வேண்டும். இதுவரை சாலையே போடப்படாமலும், குடிநீா் அளிக்காமலும் இருந்து விட்டு தற்போது வரிகளை வசூல் செய்யும் போது குப்பைகளை கொட்டுவோம் என சொல்லுவது சரியில்லை. வரிகளை செலுத்த இரண்டொரு நாள்களாவது அவகாசம் தர வேண்டும். அதை தராமல் மிரட்டக்கூடாது. மேலும் அடிப்படை வசதிகளை செய்துத்தர வேண்டும் என கோரிக்கை மனுவையும் அளித்தனா்.