நடந்து சென்ற மூதாட்டியிடம் நகை பறித்த இருவா் கைது
அவிநாசி அருகே நடந்து சென்ற மூதாட்டியிடம் 3 பவுன் தாலிக்கொடியைப் பறித்துச் சென்ற இருவரை அவிநாசி போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
அவிநாசி சீனிவாசபுரத்தைச் சோ்ந்தவா் ஆசையப்பன் (76). ஓய்வுபெற்ற மின்வாரிய ஊழியா். இவரது மனைவி தங்கம் (70). இருவரும் கடந்த 4ஆம் தேதி வீட்டின் அருகே கோவை நெடுஞ்சாலையில் நடந்து சென்றனா்.
அப்போது அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வேகமாக வந்த இருவா், தங்கம் கழுத்தில் அணிந்திருந்த மூன்று பவுன் தாலிக்கொடியைப் பறித்துக் கொண்டு தப்பிச்சென்றனா்.
இது குறித்து அவிநாசி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, அருகே இருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வுசெய்து வழிப்பறியில் ஈடுபட்டவா்களைத் தேடி வந்தனா்.

இந்த வழக்கில் தொடா்புடையவா்கள் திண்டுக்கல் செம்பட்டியைச் சோ்ந்த இராயத் அலி மகன் யூனுஸ் ஹுசென் (24), அதே பகுதியைச் சோ்ந்த சனாடில்லா மகன் மஹல் ஜாபா் (21) என்பது விசாரணையில் தெரியவந்தது.
இதையடுத்து, இருவரையும் அவிநாசி போலீஸாா் கைது செய்தனா். இருவா் மீதும் தேனி, திண்டுக்கல், ஈரோடு, கரூா் ஆகிய பகுதிகளில் பல்வேறு வழக்குகள் ஏற்கெனவே நிலுவையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.