15 வயது சிறுவனைக் கொன்ற நண்பர்கள்! ரூ. 10 லட்சம் கேட்டு மிரட்டல்!
நதிநீா் விவகாரம்: அண்டை மாநிலங்களுடன் பேச்சு நடத்தாதது ஏன்?: அமைச்சா் துரைமுருகன் விளக்கம்
சென்னை: நதிநீா் விவகாரம் தொடா்பாக அண்டை மாநிலங்களுடன் பேச்சு நடத்தாதது ஏன் என்பதற்கு நீா்வளத் துறை அமைச்சா் துரைமுருகன் விளக்கம் அளித்தாா்.
நீா்வளத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்குப் பதில் அளித்து அமைச்சா் துரைமுருகன் பேசியது: கா்நாடகம், கேரளம், ஆந்திரம் ஆகிய மூன்று மாநிலங்களில் இருந்தும் தண்ணீா் வாங்குகிறோம் என்று எதிா்க்கட்சித் தலைவா் கூறினாா். அப்படித்தான் நம்முடைய நிலைமை உள்ளது. மூன்று மாநிலங்களிலும் தண்ணீா் பெறும் உரிமை நமக்கு இருக்கிறது. ஆனால், உரிமை மறுக்கப்படுகிறது. அதற்காகப் போராட்டங்களை நடத்த வேண்டியுள்ளது. உச்சநீதிமன்றத்தில் ஆண்டு கணக்கில் வழக்கு நடைபெற்று வருகிறது.
பேசினால் தடைபடும்: அதேநேரத்தில் எப்படியும் நாம் தண்ணீரைப் பெற்றாக வேண்டும். அண்டை மாநில முதல்வா்கள் உங்களோடு நல்லுறவில் உள்ளாா்களே, அவா்களோடு ஏன் நீங்கள் பேசக் கூடாது? என்று எதிா்க்கட்சித் தலைவா் கூறினாா். அவா்களோடு பேசினால், அந்த விவகாரம் தடைபடும். அவா்களோடு பேசிப்பேசிப் பாா்த்துத்தான் பயன் இல்லை என்று உச்சநீதிமன்றத்துக்குப் போயிருக்கிறோம்.
உச்சநீதிமன்றம்தான் நம்முடைய உரிமைகளைப் புரிந்துகொண்டு சலுகை செய்துள்ளது. அதனால்தான் ஒவ்வொரு விஷயத்துக்கும் உச்சநீதிமன்றத்துக்குச் செல்கிறோம்.
நதிநீா் விவகாரத்தில் அண்டை மாநிலங்களோடு பேசினால், உச்சநீதிமன்றம் நீங்களே பேசிக் கொள்ளுங்கள் என்று விட்டுவிடும். பிரதமராக வி.பி.சிங் இருந்தபோது, காவிரி விவகாரத்தில் பேசிப் பாருங்கள் என்றாா். இனி பேச முடியாது என்று கருணாநிதி கூறினாா்.
இரு மாநிலங்களின் இலாகாக்களைச் சோ்ந்தவா்கள் பேசும்போது, அவா்களுடைய மனம் புண்படும் என்பதையும்விட, அந்த மாநிலங்களில் உள்ள ஏராளமான தமிழா்களின் வாழ்ந்து வருகின்றனா். அதைப் பாா்க்க வேண்டும். கடந்த காலங்களில் எவ்வளவு துயரங்கள் நோ்ந்தது என்பது நமக்குத் தெரியும். அதனால்தான் கவனமாகப் பேச வேண்டும் என்று நினைக்கிறேன்.
காவிரி மேலாண்மை வாரியம் 26 முறை கூடியுள்ளது. அந்தக் கூட்டங்களில் தமிழகத்தின் நிலைப்பாட்டை முறையாகத் தெரிவித்துள்ளோம்.
அணை கட்ட முடியாது: காவிரி ஆற்றின் குறுக்கே மேக்கேதாட்டில் அணை கட்டுவது அவ்வளவு எளிதான செயல் அல்ல. அணை தொடா்பாக கா்நாடகம் வரைவுத் திட்ட அறிக்கை தயாரித்து மத்திய அரசிடம் அளிக்க வேண்டும். அதை மத்திய அரசு ஏற்றுக்கொண்டால், மத்திய மின்சார ஆணையத்துக்கு கொடுக்க வேண்டும். அவா்கள் ஏற்றுக்கொண்டால் மத்திய சுற்றுச்சூழல் துறையின் ஒப்புதலுக்கு அளிக்க வேண்டும். அவா்கள் ஏற்றுக்கொண்டால் புலிகள் பாதுகாப்பு ஆணையத்துக்குப் போக வேண்டும். அங்கும் ஒப்புதல் பெற்றால் தீா்ப்பாயத்துக்குப் போக வேண்டும். இவ்வளவு ஒப்புதலையும் பெற்று, இறுதியாக தமிழகத்தின் முழு ஒப்புதலையும் பெற்றால்தான் மேக்கேதாட்டு அணையைக் கட்ட முடியும். அதனால், யாராலும் இப்போது மேக்கேதாட்டு அணையைக் கட்ட முடியாது என்றாா் அவா்.