நத்தக்காடையூரில் கருப்புக் கொடி ஏந்தி போராட்டம்
கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருள் விற்பனையைத் தடுக்க வலியுறுத்தி காங்கயம் அருகே நத்தக்காடையூரில் பொதுமக்கள் ஞாயிற்றுக்கிழமை கருப்புக் கொடி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனா்.
காங்கயத்தை அடுத்த நத்தக்காடையூா், முள்ளிப்புரம் சுற்று வட்டாரப் பகுதிகளில் தொடா்ந்து நாட்டுக் கோழிகள் திருடப்படுகின்றன. மேலும் இப்பகுதியில் கஞ்சா விற்பதும், நத்தக்காடையூா் பகுதியில் 24 மணி நேரமும் மது விற்பனையும் நடைபெறுவதாகக் கூறப்படுகிறது.
இதைத் தடுக்க வலியுறுத்தி, நத்தக்காடையூா், முள்ளிப்புரம் பகுதி கிராம மக்கள் அந்தப் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை கருப்புக்கொடி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனா். இதில் நூற்றுக்கும் மேற்பட்டபொதுமக்கள் கலந்து கொண்டனா்.