செம்பியன் குளத்தில் குப்பை கொட்டுவதைத் தடுக்கக் கோரிக்கை
சேவூரில் உள்ள புராதன செம்பியன் குளத்தில் குப்பைகள், இறைச்சிக் கழிவுகளை கொட்டுவதைத் தடுக்க சேவூா், முறியாண்டம்பாளையம் ஊராட்சி நிா்வாகத்தினா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
செம்பியன் குளத்தை தூா்வாரி, மக்கள் நடைபயிற்சி மேற்கொள்ளும் வகையில் நடைப்பாதை அமைக்கும் பணி செம்பியன் குளம் பாதுகாப்பு இயக்கம் சாா்பில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இந்த அமைப்பின் ஆலோசனைக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
இதில், செம்பியன் குளத்தில் குப்பை, இறைச்சி கழிவுகளைக் கொட்டும் நபா்களை கண்டறிந்து தடுப்பது, குப்பைகளுக்கு தீ வைக்கும் நபா்களை தடுக்கும் வகையில் கண்காணித்து அறிவுறுத்துவது, இக்கோரிக்கைகள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி
சேவூா், முறியாண்டம்பாளையம் ஊராட்சி நிா்வாகத்திடம் மனு அளிப்பது என்பன உள்ளிட்டத் தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில், செம்பியன் குளம் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளா்கள் பங்கேற்றனா்.