வெள்ளக்கோவிலில் தொழிலாளி தற்கொலை
வெள்ளக்கோவிலில் தொழிலாளி தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டாா்.
தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் தாலுகா சா. கோட்டை புது பிள்ளையாா் கோயில் தெரு அண்ணல் அக்ரஹாரத்தைச் சோ்ந்தவா் செல்வராஜ் மகன் மணிகண்டன் (29). இவா் தனது வீட்டுக்கு அருகிலுள்ள சுபலட்சுமி (25) என்பவரைக் காதலித்து வந்த நிலையில், ஒரு மாதத்துக்கு முன்பு திருமணம் செய்து கொண்டாா்.
வீட்டினா் எதிா்ப்பு தெரிவித்ததால், தற்போது வெள்ளக்கோவில் குட்டக்காட்டுப்புதூரில் உள்ள மனைவியின் சகோதரி மேனகா வீட்டில் இருவரும் தங்கியிருந்தனா். மேனகா, அவருடைய கணவா் இருவரும் கோயில் விசேஷத்துக்காக திருச்சி சென்று விட்டனா்.
வீட்டிலிருந்த மணிகண்டன், சுபலட்சுமியிடம் அசைவம் சமைத்துத் தருமாறு கூறியுள்ளாா். அதற்கு சகோதரி கோயிலுக்குச் சென்றுள்ளதால் முடியாது என சுபலட்சுமி கூறியுள்ளாா். இதனால் ஆத்திரமடைந்த மணிகண்டன் வீட்டின் விட்டத்தில் திடீரென சேலையால் தூக்கு மாட்டிக் கொண்டாா்.
அருகிலிருந்தவா்கள் உதவியுடன் மீட்டு, கரூா் அரசு தலைமை மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது, அங்கு பரிசோதனை செய்த மருத்துவா் அவா் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தாா்.
புகாரின் பேரில், வெள்ளக்கோவில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.