நமக்குள்ளே... - அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் ‘கொடூர’ தீர்ப்பு
சில நீதிபதிகளின் அறம் பிறழ்ந்த தீர்ப்புகள், சட்டத்தின் மீதும், நீதிமன்றங்களின் மீதும் மக்களை நம்பிக்கை இழக்கச் செய்வதுடன், ரௌத்திரம் கொள்ளச் செய்கின்றன. சமீபத்திய அதிர்ச்சி, அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு.
உத்தரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த 11 வயதுச் சிறுமியை, 2021-ம் ஆண்டில் இரண்டு இளைஞர்கள் `லிஃப்ட்’ கொடுப்பதாக அழைத்துச் சென்று, மார்பை அழுத்தி, பைஜாமா (கால்சட்டை) கயிற்றை அவிழ்த்து, மறைவிடத்துக்கு அழைத்துச் செல்ல முயன்றனர். பொதுமக்கள் சிலர் திரளவே, அவர்கள் தப்பி ஓடியுள்ளனர்.
இது, புகாராகப் பதிவாகவே, அவர்கள் மீது ஐ.பி.சி பிரிவு 376 (பாலியல் வன்கொடுமை), போக்சோ சட்டப்பிரிவு 18-ன் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. புகாருக்கு ஆளானவர்கள், உயர் நீதிமன்றத்தில் செய்த மேல் முறையீட்டின் மீதான தீர்ப்புதான்... அதிர்ச்சிகளை உருவாக்கியுள்ளது.

நீதிபதி ராம் மனோகர் நாராயண் மிஸ்ரா, ‘மார்பை அழுத்தினர், ஆடையை அவிழ்த்தனர் என்பதுதான் குற்றச்சாட்டு. இது பாலியல் வன்கொடுமை ஆகாது. பாலியல் வன்கொடுமை செய்யத் திட்டமிட்டதற்கான ஆதாரமும் இல்லை. சிறுமி நிர்வாணமாக்கப்படவில்லை. இளைஞர்கள் ஆடை இல்லாமல் இருந்ததாக சாட்சி இல்லை. எனவே, இந்தக் குற்றச்சாட்டுகளை வெறும் பாலியல் சீண்டலாகவே பார்க்க முடியும்’ என்று உத்தரவிட்டு, நீதித்துறையையும்கூட அதிர வைத்துள்ளார்.
கனம் கோர்ட்டார் அவர்களே... பாலியல் வன்கொடுமை நடக்கவில்லை என்பதாலேயே, அந்தக் குற்றம் நீர்த்துவிடுமா? சம்பவ இடத்துக்கு மக்கள் வந்ததன் காரணமாகவே அவர்கள் தப்பியோடியுள்ளனர். இல்லையென்றால், அக்குழந்தை, கூட்டுப் பாலியல் வன்முறைக்கு பலியாகியிருக்கலாம், உயிரேகூட பறிக்கப்பட்டிருக்கலாம்.
நடந்திருப்பதே கொடூரம்... ஆனால், ‘அந்த அளவுக்குக் கொடூரம் இல்லை’ என்று ஒரு நீதிபதியே சொல்லியிருப்பது நீதி அல்ல, நீதிப் பிறழ்வு. சட்டங்களும், சட்டப்பிரிவுகளும் உருவாக்கப்படுவதன் நோக்கம், தண்டனைக்கான தெளிவான வரையறைக்காகவே தவிர, அதை ஓட்டையாகப் பயன்படுத்தி குற்றவாளிகள் தப்பிக்க வைப்பதற்கு அல்ல.
`உடலோடு உடல் உரசாத பாலியல் சீண்டல்... போக்சோ வழக்கின் கீழ் வராது’, ‘மனைவியுடன் இயற்கைக்கு மாறான உடலுறவு குற்றமில்லை’... என்றெல்லாம் முந்தைய காலங்களில் வெவ்வேறு நீதிமன்றங்களில் இருந்து தீர்ப்புகள் வந்துள்ளன. அந்த வரிசையில் அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் தற்போதைய தீர்ப்பு, அதன் பரிணாம வளர்ச்சியே. இப்படியே போனால், முலை வரி, சீலை வரி, உடன்கட்டை ஏறுதல், பாலியல் விவாகம் உள்ளிட்டவற்றைகூட குற்ற நீக்கம் செய்துவிடுவார்களோ என்றுதான் அஞ்சத் தோணுகிறது தோழிகளே.
பாதிக்கப்பட்ட மக்கள், குற்றம் சுமத்தப்பட்டவர்களோடும், சட்டத்தை நிறைவேற்ற வேண்டிய காக்கிகளுடனும் போராடுகிறார்கள்... நீதிபதிகளுடனுமா?
உரிமையுடன்,
ஸ்ரீ
ஆசிரியர்